பெட்டாலிங் ஜெயா, மார்ச் 11: செலாயாங் உத்தாமா, டமன்சாரா டமாய் மற்றும் தாமான் எஹ்சான் ஆகிய இடங்களில் நடைபெறும் ரம்ஜான் பஜாருக்கு வருகை புரியும் பொதுமக்களுக்கு RM5 மதிப்பிலான 500 கூப்பன்கள் விநியோகிக்கப்படும்.

இத்திட்டம் ரம்ஜான் பஜார் வணிகர்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டவும், குடியிருப்பாளர்களின் செலவினச் சுமையைக் குறைக்கவும் உதவும் என்று புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் கூறினார்.

“முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த கூப்பன்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த விநியோகத்தை மேற்கொள்ள ரம்ஜானின் இரண்டாவது வாரத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் களத்திற்குச் செல்வோம், என்றார்.

“இந்தத் திட்டம பஜார் வர்த்தகர்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்ட உதவுவதோடு, பொருட்களின் விலை தற்போது அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் சுமையைக் குறைக்க உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

பாங்சபுரி இடமான், டமன்சாரா டமாயில் 150 உணவுக் கூடைகளை ஆதரவற்றோருக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ரம்ஜான் மாதம் முழுவதும் பேரீச்சம்பழம் விநியோகம் உட்பட குடியிருப்பாளர்களுடன் நோன்பு திறக்கும் விழாவை ஏற்பாடு செய்ய தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாகப் பெய் லிங் விளக்கினார்.