SELANGOR

மலேசியாவில் அதிக இ.வி. சார்ஜிங் மையங்களைக் கொண்ட மாநிலமாகச் சிலாங்கூர் திகழ்கிறது

ஷா ஆலம், மார்ச் 12- நாட்டில் மின்சாரக் கார்களுக்கான (இ.வி.) சார்ஜிங்
நிலையங்களைக் கொண்ட மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குவதாக முதலீடு,
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ருள் தெங்கு
அப்துல் அஜிஸ் கூறினார்.

இவ்வாண்டு தொடக்கம் வரை மாநிலம் முழுவதும் 683 சார்ஜிங்
நிலையங்களை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்று
மக்களவையில் இன்று வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அவர் சொன்னார்.

அவற்றில் 136 நிலையங்கள் நேரடி மின்னேற்ற (டி.சி.) சார்ஜர்
நிலையங்களாகவும் எஞ்சிய 547 நிலையங்கள் மாற்று மின்னேற்ற
சார்ஜர்கள் நிலையங்களாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

டி.சி. முறையின் கீழ் மூல ஆதாரங்களிலிருந்து நேரடியாக
மின்கலங்களுக்கு மின்சாரத்தை வழங்கப்படுகிறது. இதன் வழி
மின்னேற்றப் பணியை விரைவாக மேற்கொள்ள முடியும். ஏ.சி. முறையின்
கீழ் மின்கலத்தை சார்ஜிங் செய்வதற்கு முன் குறிப்பிட்ட கால
இடைவெளியில் டி.சி. முறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். இதனால்
மின்னேற்றத்தில் தாமதம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூருக்கு அடுத்து கோலாலம்பூரில் 556 மின் சார்ஜிங் நிலையங்கள்
உள்ளன. அவற்றில் 82 நிலைங்கள் டி.சி. முறையிலும் 474 நிலையங்கள்
ஏ.சி. முறையிலும் செயல்படுகின்றன என்றார் அவர்.

நாடு முழுவதும் உள்ள 2,020 சார்ஜிங் நிலையங்களில் இவ்விரு
மாநிலங்களும் 61.3 விழுக்காட்டைப் பிரதிபலிக்கின்றன என அவர்
கூறினார்.

அதிக சார்ஜிங் நிலையங்களைக் கொண்ட ஐந்து மாநிலங்களில் ஜோகூர்
பினாங்கு மற்றும் பேராக் ஆகியவையும் இடம் பெற்றுள்ளதாக கூறிய அவர், அம்மாநிலங்களில் முறையே 221, 191 மற்றும் 72 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன என்றார்.


Pengarang :