NATIONAL

போலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ‘கேங் செண்ட்ரோ‘ குற்றவாளிகள் மூவர் பலி

குவாந்தான், மார்ச் 12 – சுமார் 40 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய
கொள்ளை மற்றும் நகைக் கடை கொள்ளைச் சம்பவங்களில்
தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ‘கேங் செண்ட்ரோ‘ கும்பலின்
உறுப்பினர்களான மூன்று அந்நிய நாட்டினர் நேற்றிரவு 11.30 மணியளவில்
பெக்கான்-குவாந்தான் பைபாஸ் சாலையின் 17வது கிலோ மீட்டரில்
போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 36, 44 மற்றும் 38 வயதுடைய
இரு வியட்னாமியர்கள் மற்றும் ஒரு வங்காளதேசி ஆகியோர்
புரோட்டோன் வாஜா காரில் உயிரிழந்தனர்.

பெக்கானில் உள்ள பகாங் மாநில மேம்பாட்டு வாரியப் பகுதியில்
சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சிலாங்கூர் மற்றும் பகாங் மாநில
குற்றப்புலனாய்வுத் துறை குழு கண்டதாகப் பகாங் மாநில போலீஸ்
தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

சோதனையிடும் நோக்கில் அந்த காரை நிறுத்தும்படி போலீசார்
உத்தரவிட்டனர். எனினும், பெக்கானில் கொள்ளையை நிகழ்த்துவதற்குச்
சென்று கொண்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் அம்மூவரும் நிற்காமல்
காரை வேகமாகச் செலுத்தி அங்கிருந்த தப்ப முயன்றனர் என்று அவர்
சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது போலீஸ் வாகனத்தை இடித்ததோடு
மோதித் தள்ளி நின்றது. அக்காரை போலீசார் சோதனையிட முயன்ற
போது காரிலிருந்த ஆடவன் ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கி
வேட்டு கிளப்பினான்.

தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் போலீசார் பதிலுக்கு
துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று
கொள்ளையர்களும் கொல்லப்பட்டனர் என்று இன்று இங்குள்ள பகாங் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அந்த காரில் நடத்தப்பட்ட சோதனையில் க்ளோக் 17 ரக கைத்துப்பாக்கி,
ஏழு தோட்டாக்கள், மூன்று தோட்டா உறைகள் கண்டு பிடிக்கப்பட்டன
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :