SELANGOR

ரம்ஜானை முன்னிட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கு கம்போங் பாரு லம்புக் கஞ்சி விநியோகம் – பிகேஎன்எஸ்

ஷா ஆலம், மார்ச் 14: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) ரம்ஜானை முன்னிட்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 5,000 பொட்டலம் கம்போங் பாரு லம்புக் கஞ்சியை விநியோகித்தது.

இது ஒவ்வொரு ரம்ஜான் மாதத்திலும் மேற்கொள்ளப்படும் வருடாந்திர நடவடிக்கையாகும் என துணை தலைமை நிர்வாக அதிகாரி (கார்ப்பரேட்) சுஹைமி கஸ்டோன் கூறினார்.

“இந்த ஆண்டு இத்திட்டத்திற்காக RM40,700 செலவிடப்பட்டது. அதே நேரத்தில் கோப்பராசி பிகேஎன்எஸ் பெர்ஹாட்டுக்கு லம்புக் கஞ்சி விநியோகத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற பிகேஎன்எஸ் காசேஹ் லம்புக் கஞ்சி வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.

வணிக வளாகத்தில் ஊழியர்களுக்கு 1,000 பொட்டலங்களும், பொதுமக்களுக்கு 500 பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

இரண்டாவது விநியோகம் மார்ச் 19 அன்று அதே இடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என சுஹைமி கூறினார்,

“பொது மக்களுக்கும், குறிப்பாக ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாகத்திற்கு வருபவர்கள், இந்த ஷோப்பிங் சென்டரை தங்கள் தேவைகளைப் பெறுவதற்கு விருப்பமான இடமாக மாற்றியதற்காக எங்கள் பாராட்டின் அடையாளமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் (OKU) சமையல் எண்ணெய், அரிசி, சர்க்கரை, சார்டின் மற்றும் சோயா சாஸ் போன்ற அடிப்படை அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட ரம்ஜான் காசேஹ் பேக்குகளைப் பிகேஎன்எஸ் வழங்கியது.

இது மலேசிய பார்வையற்றோர் மேம்பாட்டு அமைப்பின் (பிபிஓபிஎம்) உறுப்பினர்களாக உள்ள 65 பார்வையற்ற குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.


Pengarang :