NATIONAL

அறுவர் கைது –  90 கிலோ கஞ்சா பறிமுதல்

சுங்கை பூலோ, மார்ச் 15 – அண்டை நாட்டிலிருந்து போதைப்பொருளை கடத்தும்  நடவடிக்கையில்   ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தாய்லாந்து தம்பதிகள் உட்பட 6 நபர்களை போலீசார்  கடந்த புதன்கிழமை (மார்ச் 13) வெவ்வேறு  சோதனைகளில்  கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களில்   281,000 வெள்ளி மதிப்புள்ள 90.4 கிலோ கஞ்சா மற்றும் 1.5 லிட்டர் கெத்தும் திரவம் ஆகியவையும் அடங்கும் என சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் கூறினார்.

இரண்டு உள்ளூர் ஆடவர்களைப் பயன்படுத்தி   போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டு வருவது  அக்கும்பலின் பாணியாகும். பின்னர், அந்த இரண்டு தாய்லாந்து தம்பதிகளும்  தனியார் வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளாக சமூக விசிட் பாஸ்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவார்கள்.

வாடகைக்கு எடுக்கப்பட்ட  ஹோம்ஸ்தேய் எனப்படும் வாடகை வீடுகளில் அந்த போதைப் பொருளை மறைத்து வைத்து பின்னர் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் விநியோகம் செய்வர் என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இரண்டு முறை இத்தகைய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட அக்கும்பல் மூன்றாவது முயற்சியின் போது பிடிபட்டது  விசாரணையில் தெரியவந்தது  என்று அவர் இன்று சுங்கை பூலோ போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

சுபாங் ஜெயாவில் சாலையோரத்தில்  ஃபோர்டு ரேஞ்சர் வாகனத்தில்  10.4 கிலோ எடையுள்ள சந்தேகத்திற்குரிய 40  கஞ்சா கட்டிகளுடன்  போதைப் பொருள் விநியோகிப்பாளர்கள் என சந்தேகிக்கப்படும்  இருவரை  போலீசார் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, அம்பாங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோம்ஸ்தே மீது போலீசார் சோதனை நடத்தி 50.3 கிலோ எடையுள்ள  கஞ்சாவின் 50  கட்டிகளை கைப்பற்றினர் என அவர் சொன்னார்.


Pengarang :