NATIONAL

வெப்ப வானிலை மீது தீவிர கண்காணிப்பு- சாத்தியங்களை எதிர்கொள்ள அமைச்சு தயார்

புத்ராஜெயா, மார்ச் 15 – மக்கள் நலனை காப்பதற்குரிய
முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்கு ஏதுவாக நாட்டில் தற்போது நிலவும்
வெப்ப வானிலையை இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்
நிலைத்தன்மை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தமது அமைச்சு உருவாக்கியுள்ள வெப்ப வாநிலை கண்காணிப்பு
வழிகாட்டியை கவனத்தில் கொள்ளும் அதேவேளையில் எதிர்பாராத
சாத்தியங்களைத் எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கும்படி இதர
அமைச்சுகள் மற்றும் அரசு துறைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக
அதன் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.

தமது தலைமையிலான தேசிய புகைமூட்ட மற்றும் வறட்சி வானிலை
செயல்குழுவை அமைச்சு அமைத்துள்ளதாகவும் அந்த குழு கடந்த சில
வாரங்களுக்கு முன்னர் சந்திப்பு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செயல்குழுவில் சுகாதார அமைச்சு, கல்வியமைச்சு, இளைஞர்
மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஆகியவற்றோடு மலேசியா
வானிலை ஆய்வுத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, தேசிய
பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) போன்ற அரசு துறைகளின்
பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அவர்கள் எந்நேரமும் தயார்
நிலையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்குக் கடந்தாண்டு வெப்ப
பக்கவாதம் காரணமாக மரணச் சம்பவங்கள் பதிவாகின. ஆகவே, அவர்கள்
தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர்
சொன்னார்.

அதே போல் வறட்சி காலத்தில் நீர் விநியோக விவகாரம் மீதும் நான்
கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழல்களில் நீர் விநியோகமும்
பாதிக்கப்படும். இவை யாவற்றையும் நாம் நினைவுறுத்தி வருவதோடு

ஒருங்கிணைத்தும் வருகிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை
தீர்மானிப்பதற்கான வழிகாட்டியும் நம்மிடம் உள்ளது என்றார் அவர்.


Pengarang :