NATIONAL

வெப்பக் காலத்தில் மின் கட்டணக் கழிவு வழங்க வேண்டும் – செனட்டர் பரிந்துரை

கோலாலம்பூர், மார்ச் 20 – மலேசியாவில் நிலவும் வெப்ப வானிலையைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான ஒட்டுமொத்த  மின் கட்டணத்தில் 15 முதல் 20 விழுக்காடு  வரை தள்ளுபடி அளிக்க தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி ) நிறுவனம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்,  புத்ராஜெயா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசங்களில் வசிப்பவர்களின் நிதிச் சுமைகளைக் குறைக்க 300,000 வெள்ளி  மற்றும் அதற்கும் குறைவான விலை  மதிப்புள்ள வீடுகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது  என்று செனட்டர் டத்தோ முகமது ஹிசாமுடின் யஹ்யா கூறினார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய இடங்களில் உள்ள நாங்கள் இந்த வெப்ப அலையால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளோம்.  அன்றாட வாழ்க்கை மிகவும் சவாலானதாக மாறி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

மேலவையில் நேற்று   15வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான  முதல் கூட்டத்தில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையின் மீதான விவாதத்தில்  கலந்து கொண்டு  உரையாற்றும் போது  அவர் இவ்வாறு சொன்னார்.

கோடை காலத்தில் குளிர் சாதனம் மற்றும் மின்விசிறிகளை நீண்டகாலமாக பயன்படுத்துவதால்  மின்சார பயன்பாட்டுச் செலவு அதிகரித்துள்ளதையும் அவர் தமதுரையில் சுட்டிக்காட்டினார் .

வடகிழக்கு பருவமழையின் இறுதிக் கட்டம் மார்ச் இறுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால்  நாட்டில் வழக்கத்தை விட நீண்ட காலத்திற்கு  கடுமையான  வெப்ப மற்றும் வறண்ட வானிலை நிலவும் என்று  மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது

இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகளை  கவனிக்கவும் பாதுகாக்கவும் அரசாங்கம் ஒரு சிறப்புத் துறையை உருவாக்க வேண்டும் என்று செனட்டர் ஏசாயா ஜேக்கப் முன்மொழிந்தார்.


Pengarang :