NATIONAL

சபா, சரவாவில் நாடாளுமன்றத் தொகுதி எல்லை மறுசீரமைப்பு தேவை- அரசுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 20 – சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில்
நாடாளுமன்றத் தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்விரு
மாநிலங்களிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை
அதிகப்படுத்துவதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று செனட்டர்
பெலே பீட்டர் திங்கோங் கூறினார்.

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம்
சம்பந்தப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதித் திட்டங்களை
மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு டத்தோ அன்யி இங்காவ் நாடாளுமன்ற உறுப்பினராக
இருக்கும் பி220 பாராம் தொகுதி பகாங் மாநிலத்தின் அளவுக்குப் பெரியதாக
உள்ளது. அதே போல், டத்தோ வில்சன் உகாக் கும்போங் உறுப்பினராக
இருக்கும் பி216 உலு ரெஜாங் தொகுதியும் ஏறக்குறைய பகாங் மாநிலத்தின்
அளவைக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இது போன்ற நாடாளுமன்றத் தொகுதிகள் பிரிக்கப்பட்டு கூடுதல் தொகுதி
உருவாக்கப்பட்டால் திட்டமிடப்பட்ட பொருளாதார மற்றும் அடிப்படை
வசதித் திட்டங்கள் நடப்புச் சூழலை விட விரைவாகவும் நேரடியாகவும்
மக்களைச் சென்று சேர்வதற்கான வாய்ப்பு கிட்டும் என்று அவர்
தெரிவித்தார்.

மேலவையில் நேற்று மாமன்னரின் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்
அவர் இவ்வாறு கூறினார்.

இந்த தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கை விரைவாக அதாவது
சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களின் ஆதரவுடன் மூன்றில் இரு
மடங்கு பெரும்பான்மையை நடப்பு ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள தற்போதை சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம்
(எம்ஏ63) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சமநிலையான சுபிட்த்தை
உறுதி செய்வதற்கு இந்த தொகுதி எல்லை மறுசீரமைப்பு
மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்றார் அவர்.


Pengarang :