ECONOMY

மானியத் திட்டத்திற்கு மட்டுமின்றி பொருளாதாரத்தை வடிவமைக்கவும்  பாடு’ பதிவு அரசுக்கு உதவும்

ஷா ஆலம், மார்ச் 24 – மத்திய தரவுத்தள மையத்தில் (பாடு) தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்துவதில் சமூகத் தலைவர்கள் மற்றும் குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்த  வேண்டும் என்று மந்திரி   புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

பங்களிப்புகள் மற்றும் மானியங்களை வழங்குவதையும்  தாண்டி  பொருளாதாரத்தையும் மலேசியாவின் வளர்ச்சியை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்குரிய வாய்ப்புகளையும் அரசாங்கத்திற்கு  இந்த ‘பாடு’ தரவு மையம்  வழங்கும் என்பதை  சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நிர்வாகச் சேவை செயல் திறனிலிருந்து வறுமையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள், மலேசியா மற்றும் சிலாங்கூருக்குள் ஈர்க்கும் முதலீட்டு வகைகளைத் தீர்மானிப்பது வரை அனைத்துக்கும் ‘பாடு’ தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன என்று அவர் சொன்னார் .

நேற்று, ஷா ஆலம்  மாநகர்  மன்ற மாநாட்டு மையத்தில் பொருளாதார அமைச்சர் முகமது ரபிஸி ரம்லியுடன் நடைபெற்ற ‘பாடு’ தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உங்களுடைய பகுதிகளில் உள்ள  தனிநபர்களைப்  ‘பாடு’ தளத்தில் பதிவு செய்ய மீதமுள்ள நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இது (தரவு) தமது எதிர்காலம் மற்றும் தேசத்தின் எதிர்காலம் என்று அவர் கூறினார்.

மக்கள் நலனுக்கான கொள்கைகளைத் திட்டமிடுவதில்  நாடு துல்லியமான தரவு, தகவல் மற்றும் ஆதாரங்களை  நம்பியுள்ளது என்று அமிருடின் மேலும் குறிப்பிட்டார்.

இது அனுமானங்கள் அல்லது தனிப்பட்ட கண்ணோட்டங்களை  அடிப்படையாகக் கொண்டது அல்ல. கடந்த காலங்களில் கிராமப்புறங்கள் மிகவும் ஏழ்மையில் இருப்பதாக பலர் கூறி வந்தனர். ஆனால் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் அதிகப்படியான  வாழ்க்கைச் செலவினம் காரணமாக நகர்ப்புறங்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றன.

எனவே, பதிவுகளில் (பாடு)  எழுச்சியை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். அதனால் மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை சிறப்பாக திட்டமிட முடியும் ன்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 2ஆம் தேதி   பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் தொடங்கப்பட்ட பாடு தரவு மையம்  தனிநபர் மற்றும் குடும்பத் தகவல்களுக்கான ஒரே தரவுத் தளமாக மாறியுள்ளது. இதன் மூலம் தகுதியான மலேசியர்களுக்கு மானிய  மற்றும் உதவிகளை வழங்க முடியும்.

கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை www.padu.gov.my என்ற இணையதளத்தில் ‘பாடு’வில் பதிவு செய்யலாம் .


Pengarang :