NATIONAL

துரித உணவுப் பொட்டலத்தில் போதைப் பொருள் கடத்தல்- மூவர் கைது

கோலாலம்பூர், மார்ச் 26 – துரித உணவுக் கலங்களில் போதைப் பொருளை
பொட்டலமிட்டு விநியோகம் செய்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரு
உள்நாட்டினரையும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணையும் போலீசார் கைது
செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை செராசில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைளில் அந்த
மூவரும் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி ஸாம் ஹலிம் ஜமாலுடின் கூறினார்.

நள்ளிரவு 12.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கையில் 28
முதல் 39 வயது வரையிலான அம்மூவரிடமிருந்து 503,520 வெள்ளி
மதிப்புள்ள மெத்தம்பெட்டமின் வகை போதைப் பொருள் பறிமுதல்
செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

முதலாவது சோதனையின் போது அந்த ஆடம்பர அடுக்குமாடி
குடியிருப்பின் கீழ்த்தளத்தில் உள்ள பல்பொருள் விற்பனை மையத்தில்
இரு ஆடவர்களை கைது செய்த போலீசார் சாவிகள் மற்றும் அந்த
ஆடம்பரக் குடியிருப்பின் மின் நுழைவு அட்டையைப் கைப்பற்றியதாக
அவர் குறிப்பிட்டார்.

மாதம் 2,500 வெள்ளி வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த வீட்டை போதைப்
பொருளை பதுக்கி வைக்கும் கிடங்காக அக்கும்பல் பயன்படுத்தி
வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இரண்டாவது சோதனை நடவடிக்கையில் சோஷியல் விசிட் பாஸில் 15.735
கிலோ பேதைப் பொருளுடன் நாட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும்
வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று செராஸ்
மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் கூறினார்.

தீபகற்ப மலேசியாவின் வட பகுதியிலிருந்து பெறப்படும் இந்த போதைப்
பொருளை அதிகாரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்காகத் துரித உணவுப்
பொட்டலங்களில் வைத்து விநியோகிக்கும் பாணியை இக்கும்பல்
மேற்கொண்டு வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்
பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக எதிர்வரும் புதன்
கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :