NATIONAL

கோல குபு பாரு இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் ஏப் 4இல் நடைபெறும்

கோலாலம்பூர், மார்ச் 28- சிலாங்கூர் மாநிலத்தின் கோல குபு பாரு
தொகுதியில் இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பது
தொடர்பில் தேர்தல் ஆணையம் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் தேதி சிறப்புக்
கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

என்06 கோல குபு பாரு தொகுதி எதிர்பாராத விதமாக காலியானது
தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ்
வேங் சானிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின்
செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் கூறினார்.

1959ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அமைப்பச் சட்டத்தின் 5ஆம்
அத்தியாயத்தின் உட்பிரிவு (5) விதி எல்.எக்ஸ்.எக்ஸ். படி, காலியான
தொகுதி 60 நாட்களுக்குள் நிரப்பப்பட வேண்டும் என்பதோடு இதனை
தேர்தல் ஆணையமும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே
தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ரிட் தேதி, வேட்புமனுத்
தாக்கல் தேதி, வாக்களிக்கும் தேதி, தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள
வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து
விவாதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்று நோய்
காரணமாகக் கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழுள்ள கோல குபு பாரு
சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக லீ கடந்த 2013ஆம் ஆண்டு முதல்
பதவி வகித்து வந்தார்.


Pengarang :