NATIONAL

அரசக் குடும்பத்தை அவமதித்த நபரை எம்.சி.எம்.சி. அடையாளம் கண்டது

கோலாலம்பூர், மார்ச் 27 – ஆட்சியாளர்களை குறிப்பாக சிலாங்கூர் அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாக நம்பப்படும் நபரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்  (எம்.சி.எம்.சி.) மூலம் தகவல் தொடர்பு அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

நிந்தனை அறிக்கைகளை தொடர்ச்சியாக  வெளியிடும் மனப்போக்கைக்  கொண்ட அந்நபருக்கு எதிராக 20 விசாரணை அறிக்கைகளை போலீஸார் ஏற்கனவே திறந்துள்ளனர் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

அரச ஸ்தாபனங்களுக்கு  எதிரான தாக்குதல் மற்றும் அவமதிப்பு அறிக்கைகளை முகநூல் தளத்திலிருந்து அகற்றப்படுவதை உறுதிசெய்ய காவல்துறையுடன் கடுமையான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு எம்.சி.எம்.சி.க்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இதுபோன்ற உள்ளடக்கம் டிக்டோக்கிலும் உள்ளதாக  என்னிடம் கூறப்பட்டது என அவர் சொன்னார்

ஆகவே,  3ஆர்  (இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள்)  விவகாரதத்தில் முகநூல் மற்றும் பிற இயங்குதள சேவை  வழங்குநர்கள் சிறப்பான  மற்றும் உடனடி ஒத்துழைப்பை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் பல நடவடிக்கைகளை  நாங்கள் ஆராய்வோம் என்று  அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

சிலாங்கூரின் அரச குடும்பத்திற்கு எதிரான அவதூறான மற்றும் இழிவான கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படும்  வீடியோ சமீபத்தில் வைரலானது.

முன்னதாக அவர் தனது உரையில், வேண்டுமென்றே பிளவு விதைகளை விதைக்கும் மற்றும் எரிச்சலூட்டும் கருத்துக்களை வெளியிடும் தரப்புக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எம்.சி.எம்.சி.யை  வலியுறுத்தினார்

சமூகத்தில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் மற்றும் நிகழ்ச்சிகளை ஆர்.டி.எம். அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :