NATIONAL

ஓமானிடம் மலேசியா 0-2 கோல் கணக்கில் தோல்வி- விளையாட்டாளர்களைத் தற்காக்கிறார் பான் கோன்

கோலாலம்பூர், மார்ச் 27 – புக்கிட் ஜாலில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற  2026 உலகக் கிண்ண/ 2027 ஆசியக் கிண்ண தகுதிப் போட்டியின் இரண்டாவது சுற்று  டி பிரிவு  ஆட்டத்தில் ஓமான் நாட்டிடம்  0-2 என்ற கணக்கில் ஹரிமாவ் மலாயா தோல்வியடைந்தாலும்  அக்குழுவின் தலைமைப் பயிற்சியாளர் கிம் பான் கோன் தனது விளையாட்டாளர்களுக்கான  ஆதரவைப் உறுதிப்படுத்தினார்.

போட்டித் தன்மை கொண்ட ஆட்டங்கள் இல்லாததால்  உண்மையான திறனைச் வெளிப்படுத்தத் தவறிய சூழலில் தனது அணி உள்ளது என்று அந்த தென் கொரியப் பயிற்சியாளர் கூறினார்.

போட்டி தன்மை  கொண்டப் போட்டிகள் இல்லாதது விளையாட்டாளர்களின் திறனை குன்றச் செய்துள்ளது. உடல் தகுதியின்மையால் வீரர்களின் செயல்திறன் பாதிக்கிறது.  உலகக் கிண்ணத் தகுதிப் போட்டிகளில் மலேசியாவின் வாய்ப்புகளை இது பாதிக்கும் என்பதால் எதிர்காலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பெரிய வருத்தத்தைத் தரக்கூடும் என்று அவர் சொன்னார்
.
யாரையும் குறை சொல்லாதீர்கள். எந்த சூழ்நிலையில் நாங்கள் அவர்களை தயார் செய்தோம் என்பதன் அடிப்படையில் வீரர்கள் தவறு செய்யலாம்.  போட்டி த் தன்மை கொண்ட ஆட்டங்களில் அவர்கள் பங்கேற்று  எத்தனை மாதங்கள் ஆகிறது? அவர்கள் இயந்திரங்கள் அல்ல. அவர்கள் தவறு செய்யும் போது நான் வலியை உணர்கிறேன். காரணம்,  நாம் அவர்களை இந்த நிலைக்கு தள்ளிவிட்டோம் என்றார் அவர்.

ஒருவேளை பின்னர் நாங்கள் (பங்களிப்பாளர்கள்) பெரிய வருத்தத்தை அடைவோம். ஏனெனில் இந்த சூழ்நிலையை உருவாக்கியது விளையாட்டாளர்கள் அல்ல. இந்த சூழலை நாம்தான்  உருவாக்கினோம் என்று அவர் இங்கே போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.


Pengarang :