NATIONAL

மத்திய அரசின் வருமானம் இவ்வாண்டு 31,200 கோடி வெள்ளியாக அதிகரிக்கும்- நிதியமைச்சு கணிப்பு

கோலாலம்பூர், மார்ச் 27- இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரி நடவடிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டதன் அடிப்படையில் வரியின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் மற்றும் பொருளாதார வளரச்சி ஆகியவற்றின் வாயிலாக 2024ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வருமானம் 31 ஆயிரத்து 219 கோடியே 90 லட்சம் வெள்ளியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் மிகப்பெரிய பங்களிப்பை அதாவது மொத்த வருமானத்தில் 79.5 விழுக்காடு தொகையை வழங்கும் வேளையில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.57 விழுக்காடாகவும் இருக்கும் என்று துணை  நிதியமைச்சர் லிம் ஹூய் யிங் கூறினார்.

வரி அல்லாத வருமானம் 20.5 விழுக்காடாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.24 விழுக்காடாக இருக்கும் என்று மக்களவையில் இன்று அவர் சொன்னார்.

வலுவான பொருளாதார வளர்ச்சி, வரி அடிப்படையை விரிவுபடுத்துதல்,  மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், வரி வருமான அடித்தளத்தை பெருக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை  ஆகியவை கூடுதலாக வருமான ஈட்டும் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு நாட்டின் வரி வசூலிப்பு கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான சாத்தியம் உள்ளதா என பாரிட் உறுப்பினர் முகமது இஸ்மி மாட் தாயிப் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் வருமான வளங்களை பல்வகைப் படுத்துவதற்கும் அதிகரிப்பதற்கும் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதோடு அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :