NATIONAL

கூட்இயர் நிறுவன ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க 22 நிறுவனங்கள் தயார்- பாப்பாராய்டு

கோலாலம்பூர்,  மார்ச் 27 – ஷா ஆலயில் உள்ள  கூட்இயர்   தொழிற்சாலை   மூடப்படவிருப்பதை தொடர்ந்து பாதிக்கப்படவிருக்கும் அந்த  தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு   22 உள்நாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும்  அந்நிறுவனங்கள் கூட்இயர் நிறுவனத்தில் இதற்கான முகப்பிடங்களை திறக்கவிருப்பதாகவும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.

அந்த தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில்  அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க  அந்த நிறுவனங்கள்  முன்வந்திருப்பதாக  அவர்  கூறினார்.

எதிர்வரும் ஏப்ரல்  22 ஆம் தேதி முதல்  25ஆம் தேதிவரை புதிய  தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்காக  முகப்பிடங்களை   கூட்இயர் தொழிற்சாலையிலேயே திறப்பதற்கு அந்த  22 நிறுவனங்களும் முன்வந்ததாக   அவர் தெரிவித்தார்.

இன்று கூட்இயர் தொழிற்சாலைக்கு வருகை புரிந்து    அந்த நிறுவனத்தின்   பிரதிநிதிகளை  சந்தித்தபின் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில்    சிலாங்கூர் சொக்சோ  இயக்குனரும் கலந்துகொண்டார். ஷா அலமில் இயங்கிவரும் உலகளாவிய  டயர் உற்பத்தி தொழிற்சாலையான  கூட்இயர் எதிர்வரும் ஜூன்  30ம் தேதியுடன் தனது  நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளப்போவதாக   அறிவித்ததைத் தொடர்ந்து  அங்கு வேலை செய்துவந்த  550 தொழிலாளர்கள் வேலை  வாய்ப்பை இழக்கவிருக்கின்றனர்.

பாதிக்கப்படும்  550 தொழிலாளர்களுக்கும் சொக்சோ உதவித் தொகையை வழங்கியிருப்பதோடு  MyFutureJobs அகப்பக்கம் மூலம் அவர்களுக்கு     வேலைவாய்ப்பு உதவியும்  வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக பாப்பாராய்டு  கூறினார்.


Pengarang :