NATIONAL

எட்டு சட்டவிரோதக் குடியேறிகளுக்குச் சிறப்பு நீதிமன்றத்தில் ஆறு மாதச் சிறை

கோத்தா பாரு, மார்ச் 29 – எட்டு அந்நியக் குடியேறிகளுக்கு தானா மேரா
சட்டவிரோத அந்நியக் குடியேறிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நேற்று ஆறு
மாதச் சிறைத்தண்டனை விதித்தது.

நேற்றைய வழக்கின் போது 19 முதல் 55 வயது வரையிலான அந்த
எண்மரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நிக்
ஹப்ரி முகமது இத்தண்டனையை வழங்கியதாகக் கிளந்தான் மாநில
குடிநுழைவுத் துறையின் இயக்குநர் முகமது பைசால் சம்சுடின் கூறினார்.

அந்த சட்டவிரோத அந்நியக் குடியேறிகளில் மூவர் மீது 1959/63ஆம் ஆண்டு
குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவின் கீழும் மேலும் ஐவர் மீது அதே
சட்டத்தின் 15(1)(சி) பிரிவின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டதாக அவர்
தெரிவித்தார்.

தாய்லாந்து பெண் ஒருவருக்கு 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச்
சட்டத்தின் 6(1)(சி) பிரிவின் கீழ் ஆறு மாதச் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்ட வேளையில் கைதான தேதியிலிருந்து தண்டனையை
அனுபவிக்க உத்தரவிடப்பட்டது என்றார் அவர்.

இதே சட்டப் பிரிவின் கீழ் தாய்லாந்து பிரஜை ஒருவருக்கு ஆறு மாதச்
சிறையும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது என்று முகமது
பைசால் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும் 15 சி பிரிவின் கீழ் சிரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து
ஆடவர்களும் தாய்லாந்து பெண்ணும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கு
தலா ஆறு மாதச் சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும்
விதிக்கப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதிகள் பெங்காலான் செப்பா
சிறைச்சாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் ஆண் கைதிகள் பாசீர் மாஸ் ஒருங்கிணைந்த சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :