NATIONAL

ஆற்றில் திடீர் நீர்ப்பெருக்கு- தாய், மகள் மாயம்- மகன் மூழ்கி மாண்டார்

கோலாலம்பூர், ஏப் 1- ஸ்ரீ கெம்பாங்கானிலுள்ள கோத்தா பெர்டானா,
ஜாலான் 4/9 இல் உள்ள ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற ஐவர் கொண்ட
குடும்பத்தினர் திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். இந்த பேரிடரில்
சிறுவன் ஒருவன் உயிரிழந்த வேளையில் தாயும் மகளும் காணாமல்
போனதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.45 மணியளவில் தாங்கள்
புகாரைப் பெற்றதாகச் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் முக்லிஸ் மொக்தார்
கூறினார்.

அந்த காட்டாற்று வெள்ளத்திலிருந்து தப்பிய 40 வயது மதிக்கத்தக்க
ஆடவரிடமிருந்து நாங்கள் புகாரைப் பெற்றோம். தனது 38 வயது
மனைவி, ஒன்பது மற்றும் பத்து வயதுடைய இரு மகன்கள் மற்றும்
நான்கு வயது மகள் ஆகியோர் வேகமான நீரோட்ட்டத்தில் அடித்துச்
செல்லப்பட்டதாக அவ்வாடவர் தெரிவித்தார் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஷா ஆலம் தீயணைப்பு நிலையத்தின் நீர் மீட்புக்
குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து சுமார்
ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 10 வயதுச் சிறுவனின் உடலை அவர்கள்
இரவு 7.01 மணியளவில் மீட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில்
சொன்னார்.

நேற்று மாலை 5.18 மணியளவில் பொது மக்கள் ஒன்பது வயதுச்
சிறுவனைக் காப்பாற்றியதாகக் கூறிய அவர், தாய் மற்றும் மகளைத்
தேடும் முயற்சியில மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்
என்றார்.

அக்கும்பத்தினர் அப்பகுதியில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த
போது திடீரென நீர்ப் பெருக்கு ஏற்பட்டு அவர்கள் வேகமான நீரோட்டத்தில்
அடித்துச் செல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :