NATIONAL

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டனர்

செர்டாங், ஏப் 1- ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள கோத்தா பெர்டானா, ஜாலான்
கே.பி. 4/9 பகுதியில் துணை ஆறு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த
போது வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இந்தோனேசியப் பிரஜைகள் என்று
அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அக்குடும்பத்தின் மூத்த மகனான
முகமது டாஹ்ம் அகமது சுரியாடி (வயது 10) என அடையாளம்
காணப்பட்ட வேளையில் அவரின் தாயாரான ஜூலியானா (வயது 38)
இளைய மகள் ரிஸ்கா அமெலியா (வயது 4) ஆகியோர் காணாமல்
போனதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ.
அன்பழகன் கூறினார்.

இந்த சம்பவத்தில் குடும்பத் தலைவரான அகமது சுரியாடி வயது 43)
மற்றும் ஒன்பது வயது மகனான முகமது அலிப் ஆகியோர்
உயிர்த் தப்பியதாக அவர் தெரிவித்தார்.

உபரி வருமானம் பெறுவதற்காக அந்த ஆற்றில் வலை வீசி மீன் பிடிக்கும்
பணியில் அக்குடும்பத்தினர் ஈடுபட்டு வந்ததாக அகமது சுரியாடி கூறினார்.

மாலை 5.00 மணியளவில் ஆற்றில் திடீரென நீர் பெருக்கெடுக்க
ஆரம்பித்ததாகவும் சிறிது நேரத்தில் ஆற்றில் நீர் மட்டம் 1.2 மீட்டர்
அளவுக்கு உயர்ந்து அனைவரும் வேகமான நீரோட்டத்தில் அடித்துச்
செல்லப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார் என அன்பழகன்
தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் அகமது சுரியாடி உயிர்தப்பி அதிகாரிகளைத் தொடர்பு
கொண்டு உதவி கோரினார். அவரின் இரண்டாவது மகனான முகமது
அலிப் ஆற்றின் அடுத்த கரையில் ஏறி உயிர்த்தப்பினார், அவரை பொது
மக்கள் பத்திரமாக மீட்டனர் என்று அவர் நேற்று சம்பவ இடத்தில்
செய்தியாளர்களிடம் சொன்னார்.

முகமது அலிப்பின் உடல் சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்
தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டு சவப்பரிசோதனைக்காக செர்டாங்
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.

இச்சம்பவத்தில் காணாமல் போன இருவரைத் தேடும் பணியை மீட்புப்
பணியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :