NATIONAL

கோல லங்காட்டிலுள்ள  தமிழ்ப்பள்ளிகளில் யோகா, தியானப் பயிற்சி – தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ஏற்பாடு

பந்திங், ஏப் 1- பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சியை வழங்குவது தொடர்பில்  கோல லங்காட் மாவட்டத்தை சேர்ந்த 13 தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் விரைவில் சந்திப்பு நடத்தப்படும் என்று கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி கூறினார்.

தமிழ்ப்பள்ளிகள் நமது தேர்வு என்று மட்டுமே பேசிக்கொண்டு இல்லாமல் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்தியர்களின் பாரம்பரிய யோகா மற்றும் தியானம் போன்றவற்றை பள்ளி மாணவர்களுக்கு முறையை போதிப்பதின் வழி அவர்களை ஒரு சிறந்த மாணவர்களாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் கூறினார்.

இங்குள்ள தஞ்சோங் சிப்பாட் துப்போக் தோட்ட தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற சிலாங்கூர் சிவ மரபு சித்தாந்த தியான சபை ஏற்பாட்டில் நடைபெற்ற மாணவர்களுக்கான இலவச யோக  மற்றும் தியான பயிற்சியை முடித்து வைத்த போது ஹரிதாஸ் ராமசாமி மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு முன்னோடியாக விளங்குவதால் அவர்களுக்கு நற்பண்புகளை புகுட்டுவது நமது கடமையாகும். எனவே முதல் கட்டமாக மாதத்தில் ஒரு நாள் மாணவர்களுக்கு கட்டாய யோக மற்றும் தியான பயிச்சியை வழங்க தாம் உரிய கவனம் செலுத்துவதாக கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கஸ்தூரி ராமச்சந்திரன், பள்ளி மேலாளர் வாரிய தலைவர் எம்.வேலாயுதம்,  இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மாதம் ஒரு முறை நடத்த திட்டம் வகுக்கப்படும் என்றனர்.

சிலாங்கூர் சிவ மரபு சித்தாந்த தியான சபையின் குருஜி சுகுமாரன் தாங்கள் தற்போது நாடு முழுவதும் இந்த பயிற்சியை நடத்தி வந்தாலும் பள்ளி மாணவர்களுக்கு முதலிடம் வழங்கி வருவதாகவும், அதனால் தாங்கள் பயிற்சி வழங்க தயார் என்று கூறினார்.


Pengarang :