NATIONAL

ஆடவரிடம் ஆயுதமேந்தி வெ.300,000 கொள்ளையிட்டதாக இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப் 1 – மூன்று வாரங்களுக்கு முன் ஆடவர் ஒருவரிடம் 300,000 வெள்ளியைக்  கொள்ளையிட்டதாக  அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை இரு பெண்கள் மறுத்து விசாரணைக் கோரினர்.

கடந்த மார்ச் 15ஆம் தேதி  மதியம் 1.00  மணியளவில் அம்பாங், தாமான் மெலாவதி சாலையோரம் ஹர்தேவ் சிங் கில் (வயது 27) என்பவரிடம்  தலைமறைவாக இருந்து வரும் இதர ஐவருடன் சேர்ந்து  ஆயுதமேந்தி கொள்ளையிட்டதாக  ஜரீனா சினின் (வயது 54) மற்றும் சஃபியா இப்ராஹிம் (வயது 59) ஆகியோர் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி  வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 395/397 பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட இரு பெண்களையும்  தலா 7,000 வெளளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி வான் முகமது நோரிசாம் வான் யாக்கோப்,  அவர்கள்  மாதம் இருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார்.

துணை அரசு வக்கீல் ஹக்கீம் அமீர் அப்துல் ஹமீட்  இந்த வழக்கை நடத்தும் வேளையில் ஜரினா சார்பில் வழக்கறிஞர் முகமது ஃபாட்லி எம். சுட்ரிஸ் ஆஜரானார். இந்த வழக்கில் சஃபியாவை யாரும்  பிரதிநிதிக்கவில்லை.


Pengarang :