NATIONAL

டிங்கி உயிரிழப்பு  4, சம்பவங்கள் 3,041 ஆக அதிகரித்துள்ளன

புத்ராஜெயா, ஏப் 2: கடந்த ஆண்டு மார்ச் 17 முதல் 23 வரையிலான 12வது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 2,905 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 3,041 ஆக அதிகரித்துள்ளது.

டிங்கி காய்ச்சலினால் 12வது தொற்றுநோயியல் வாரத்தில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார டைரக்டர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். .

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 26,222 டிங்கி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 12 வது தொற்றுநோயியல் வாரத்தில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை 41,565 ஆகும்.

முந்தைய வாரத்தில் 161 ஹாட்ஸ்பாட் இடங்களுடன் ஒப்பிடும்போது, தற்போது பதிவான ஹாட்ஸ்பாட் இடங்களின் எண்ணிக்கை 141 ஆக குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் 118 இடங்களைப் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா (13), பினாங்கு (6), பேராக் (2), நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூரில் தலா ஓர் இடம் என பதிவாகியுள்ளன.

பண்டிகைக் காலம் சமூகத்தின் நடமாட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது, இதனால், டிங்கி காய்ச்சல் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தண்ணீர் சேமிக்கும் கொள்கலன்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், வீட்டை விட்டு வெளியேறும் முன் தண்ணீரைச் சேமிக்கும் அனைத்து கொள்கலன்களையும் இறுக்கமாக மூடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :