NATIONAL

எஸ்.சிவசங்கரி லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்கின் வெற்றியாளராக வாகை சூடினார்

கோலாலம்பூர், ஏப் 2 – தேசிய ஸ்குவாஷ் ராணி எஸ்.சிவசங்கரி, லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்கின் வெற்றியாளராக வாகை சூடி, நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.

மலேசியாவின் விளையாட்டு வீரங்கனையான நிக்கல் டேவிட் ஸ்குவாஷில் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவசங்கரி, நேற்று திங்கட்கிழமை உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி வரலாறு படைத்து, பெரும்பாலான மலேசியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய வெற்றிதிருமகளானார்.

கெடா சுங்கை பட்டாணியில் வள்ளி நாகப்பன் – சுப்ரமணியம் கண்னியப்பன் தம்பதிகளின் மகளான அவர் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் நாட்டை பிரதிநிதித்து பிரதான விளையாட்டாளராகக் களம் இறங்கும் முன் கடும் சாலை விபத்தில் சிக்கி மீண்டு எழுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தரவரிசையில் 13 வது இடத்தில் இருந்த சிவசங்கரி, முதல் செட்டில் 11-9 என புள்ளிகள் பெற்றார். அதனை தொடர்ந்து, எல் ஹம்மாமி இரண்டாவது செட்டில் 11-5 என்ற கணக்கில் முன் நோக்கி செல்ல தொடங்கினார்.

இருப்பினும், மூன்றாவது செட்டில், ஆட்டத்தின் கட்டுப்பாடு சிவசங்கரிக்குச் சாதகமாக மாறியது. அவர் 13-11 எனும் கணக்கில் மூன்றாவது செட்டில் முன் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் 14-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆறு சந்திப்புகளில் எல் ஹம்மாமிக்கு எதிராக சிவசங்கரி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

“இதைச் சுருக்கமாகச் சொல்ல எந்த வார்த்தையும் இல்லை, ஆனால் இந்த வாரம், முதல் தரவரிசையில் உள்ள 10 வீரர்களை மூன்று முறை தோற்கடித்ததன் மூலம் நான் எவ்வாறு என்னைக் கையாண்டேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் அனைவரும் உண்மையில் நல்ல வீரர்கள் ஆவர் என சிவசங்கரி தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் சிவசங்கரி 17,598 அமெரிக்க டாலர்கள் (RM83,141) ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வார்.

– பெர்னாமா


Pengarang :