NATIONAL

சிலாங்கூர் அரசு துறைகளின் தரவுகளைப் பகிர்வது தொடர்பில் ‘பாடு‘வுடன் மாநில அரசு ஒப்பந்தம்

ஷா ஆலம், ஏப் 3- மாநில அரசு துறைகளின் தரவுகளை கூட்டரசு தரவுத்
தளத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசு ‘பாடு‘
எனப்படும் மத்திய தரவுத் தள மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள ஷரத்துகளுக்கு ஏற்ப
நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலங்கா செயலியில் உள்ள 66,216 உதவித்
தொகை பெறுவோர் சம்பந்தப்பட்ட 37 லட்சம் தரவுகளை மாநில அரசு
‘பாடு‘வுடன் பகிர்ந்து கொள்ளும்.

தரவுகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பில் ‘பாடு‘ அமைப்புடன்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் மாநிலமாகச் சிலாங்கூர்
விளங்குகிறது.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உதவி பெறுவோர் பற்றிய மேலும் அதிகமான
தரவுகளை ‘பாடு‘வுடன் பகிர்ந்து கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் எனத்
தாம் நம்புவதாக இன்று இங்கு நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றிய போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

தேசிய கொள்கையை அமல் செய்வதில் அல்லது உருவாக்குவதில் இந்த
தரவுகள் மத்திய அரசுக்குப் பெரிதும் துணை புரியும் என்று அவர்
நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த தரவு பகிர்வு நடவடிக்கை ஒரு முறையுடன் நிறுத்தப்படாது என
மாநில அரசு நம்புவதாகக் கூறிய அவர், மலேசியர்களுக்கு குறிப்பாக
சிலாங்கூர்வாசிகளுக்கு பயன்தரும் வகையில் இந்த ஒத்துழைப்பு
தொடரும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

தரவுகளின் தனியுரிமை குறித்து எழுந்துள்ள கவலைகளை நான் உணர்ந்துள்ளேன். எனினும், இது ஜி2ஜி எனப்படும் அரசாங்கத்திற்கும் இடையிலான தரவு பகிர்வை உள்ளடக்கியுள்ளதால் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் எந்த விதிகளும் இதில் மீறப்படவில்லை என்று குறிப்பிட்டார்.


Pengarang :