NATIONAL

8.4 மில்லியன் மக்களுக்கு ரஹ்மா ரொக்க நன்கொடை விநியோகம்

புத்ராஜெயா, ஏப் 4: நேற்று முதல் ரஹ்மா ரொக்க நன்கொடையின் (STR) கட்டம் 2இல் 8.4 மில்லியன் பெறுநர்களுக்கு RM100 முதல் RM650 வரையிலான ரொக்கத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கியது.

ரஹ்மா ரொக்க நன்கொடை தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும் புதிய பயனாளிகளுக்கும் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும் அல்லது பேங் சிம்பனான் நேஷனல் (BSN) மூலம் பணம் வழங்கப்படும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு 2024 முதல், பதிவை ஆண்டு முழுவதும் திறக்கும் புதிய அணுகுமுறை அரசாங்கம் மேற்கொள்ளும். மேலும் அதிகமான மக்கள்  இந்த உதவி மூலம் பயனடையும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

“எனவே, ஆண்டு முழுவதும் நடத்தப்படும் புதிய விண்ணப்பம் மற்றும் தரவு புதுப்பிப்பு செயல் முறையை மேற்கொள்வதன் மூலம் தகுதியான பெறுநர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அறிக்கை கூறுகிறது.

விண்ணப்பதாரரின் பெயர் தரவுத்தளத்தில் இல்லை என்றால், அவர்கள் புதியதாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இத்திட்டத்திற்கான கட்டம் 2இல் இலக்கு மானியத்தின் ஒதுக்கீடு 20 சதவீதம் அதாவது RM1.5 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது (கடந்த ஆண்டு RM1.26 பில்லியன்). குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடையவர்களுக்கு இந்த அதிகரிப்பு வாழ்க்கை செலவைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.

ரஹ்மா ரொக்க நன்கொடையின் தகுதி நிலை சரிபார்ப்பு மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை அதிகாரப்பூர்வ போர்ட்டலில் https://bantuantunnai.hasil.gov.my என்ற இணைப்பின் மூலம் காணலாம்.

பொறுப்பற்ற தரப்பினரின் நம்பகத்தன்மையற்ற இணைப்புகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு இந்த உதவித்தொகை பெறுபவர்களுக்கு நிதி அமைச்சு அறிவுறுத்துகிறது.

– பெர்னாமா


Pengarang :