NATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல்- வேட்பாளரை இறுதி செய்ய ஹராப்பான் தலைவர்கள் சந்திப்பு 

புத்ராஜெயா, ஏப் 5 – கோல குபு பாரு இடைத்தேர்தல் தொடர்பான விஷயங்களை விவாதிப்பதற்கும் அக்கூட்டணியைப் பிரதிநிதிக்கக்கூடிய  பொருத்தமான வேட்பாளரை இறுதி செய்வதற்கும் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்)  விரைவில் கூட்டத்தை நடத்தும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன்  இஸ்மாயில் கூறினார்.

அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான சமீபத்திய தேதியை தீர்மானிப்பதற்காகப் பிரதமரும் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தாம்  சந்திக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

வழக்கமாக, அந்தக் கூட்டத்தில் காலியான தொகுதியில்  போட்டியிடும் கட்சியை நாங்கள் இறுதி செய்வோம்.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட கட்சியின்  வேட்பாளர் பட்டியலை பரிசீலிப்போம்.  பின்னர் தேர்தல் இயந்திரம், தேர்தல் பணிகள் தொடர்பான விஷயங்களை விவாதிப்போம் என்று அவர் இங்கு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இவை யாவும் ஒவ்வொரு முறையும் இடைத்தேர்தலை சுற்றி நடக்கும் போது  நிகழக்கூடிய வழக்கமான நடைமுறைகளாகும் என்று சைபுடின் கூறினார்.

சிலாங்கூரின் கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று  அறிவித்தது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதியும்   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே தெரிவித்தார்.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாக  கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாகக் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.


Pengarang :