NATIONAL

நீண்ட தூரம் செல்லும் விரைவு பஸ்களில் இரண்டாவது ஓட்டுநர் அவசியம் தேவை

பட்டர்வொர்த், ஏப் 5 – முன்னூறு கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யும் விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இரண்டாவது ஓட்டுநர்கள் இருக்க வேண்டும்.

ஓட்டுநர்கள் போதுமான ஓய்வு பெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக நான்கு மணிநேரத்திற்கும் மேற்பட்ட பயணங்களுக்கு இந்த நிபந்தனை பின்பற்றப்பட வேண்டும் என்று பினாங்கு மாநில சாலைப் போக்குவரத்து இலாகா  (ஜே.பி.ஜே.) இயக்குநர் ஜூல்கிப்ளி இஸ்மாயில் கூறினார்.

இந்த நடவடிக்கையின் மூலம்  விபத்துகளின் அபாயத்தை குறிப்பாக, மரண விபத்துக்களைக் குறைக்க இயலும் என்று அவர் சொன்னார்.

300 கிலோ மீட்டருக்கு  மேல் பயணம் செய்யும் விரைவு பஸ்களுக்கு இரண்டாவது டிரைவர் அவசியம் தேவை. ஆனால் பல விரைவு பஸ் நிறுவன நடத்துநர்கள் இந்த நிபந்தனையைப் பின்பற்றத் தவறிவிடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த பஸ் முனையத்தில் இரண்டாவது ஓட்டுநர் பொறுப்பேற்பார் என்று வழக்கமாக காரணம் கூறப்படுகிறது. ஆனால் பயணத்தைத் தொடங்கும்போதே இரண்டு ஓட்டுநர்களும் பேருந்தில் இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இங்குள்ள பினாங்கு சென்ட்ரல் பஸ் முனையத்தில்  நேற்று இரவு நோன்புப் பெருநாள் சிறப்பு சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இரண்டாவது ஓட்டுநர் இல்லாத விரைவு பேருந்துகள்  பயணத்தைத் தொடங்க அனுமதிக்கப்படாது என்றும் ஜூல்கிப்ளி கூறினார்.

இதனிடைமே, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் மொத்தம் 121 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு இரண்டாவது ஓட்டுநர் இல்லாத ஐந்து பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பெருநாள் கால சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 4,553 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு குற்றங்களுக்காக 1,377 சம்மன்கள் வழங்கப்பட்டன. மேலும் 790 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளையில்  37  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.


Pengarang :