NATIONAL

கலவரத்தில் ஈடுபட்ட 19 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட 23 ஆண்கள் கைது

மலாக்கா, ஏப் 5: மார்ச் 29 அன்று, தஞ்சோங் கிளிங்கின் பந்தாய் புத்ரியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்ட 19 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 23 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை தஞ்சோங் கிளிங், மாலிம் மற்றும் தஞ்சோங் மிஞ்ஞாக் பகுதிகளைச் சுற்றி அனைத்து நபர்களும் கட்டம் கட்டமாகக் கைது செய்யப்பட்டதாக மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ ஜைனோல் சாமா தெரிவித்தார்.

அனைத்து மாணவர்களும் தஞ்சோங் கிளிங்கைச் சுற்றியுள்ள வெவ்வேறு இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த சம்பவத்தில் 15 வயது மாணவர் தாக்கப்பட்டதன் விளைவாக அவரது உடல் மற்றும் முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாக ஜைனோல் சாமா கூறினார்.

“முதற்கட்ட விசாரணையில், அதிருப்தி மற்றும் கேலியால் உருவான ஒரு தவறான புரிதல் காரணமாக இரண்டு குழுக்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.

“சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மூன்று ஹெல்மெட்கள் மற்றும் ஒரு தடியையும் காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், அனைத்து சந்தேக நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப் படவில்லை” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், கலவரத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் 148 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

சண்டையின் சம்பவத்தைக் காட்டும் 4.09 நிமிட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது மற்றும் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவர் மார்ச் 31 அன்று தஞ்சோங் கிளிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேல் சிகிச்சைக்காகக் காயமடைந்தவர் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

– பெர்னாமா


Pengarang :