MEDIA STATEMENTNATIONAL

துப்பாக்கிகளை வைத்திருந்த இஸ்ரேலிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப் 12-  தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலியர் மீது இன்று  கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்   சாட்டப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர்  டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறினார்.

ஆம், இன்று  காலை அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று  பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு புலனம்  மூலம் நேற்று  அனுப்பிய செய்தியில் அவர்  தெரிவித்தார்.

முப்பத்தாறு வயதான அந்த இஸ்ரேலிய ஆடவர் கடந்த மார்ச் 27ஆம் தேதி  தலைநகர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவர் மார்ச் 12 ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசிலிருந்து இருந்து பிரான்ஸ் கடப்பிதழைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக மற்றொரு இஸ்ரேலிய பிரஜையை தேடி கொலை செய்ய தாம்  மலேசியா வந்ததாக இஸ்ரேலிய கடப்பிதழையும் வைத்திருக்கும்  அந்த  சந்தேக நபர் விசாரணையின் போது போலீசாரிடம்   கூறியுள்ளார்.

அந்த இஸ்ரேலிய நபருக்கு  துப்பாக்கிகளை விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு தம்பதியினர் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில்  கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி  கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


Pengarang :