பிரதமர் மக்களை அணுகுவதற்கான தளமாக அய்டில்பித்ரி மடாணி பொது உபசரிப்பு விளங்குகிறது

மலாக்கா, ஏப் 13- பல்வேறு நிலைகளில் குறிப்பாக மாநில அளவில் நடத்தப்படும் அய்டில்பித்ரி மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வுகள், அண்மைய காலமாக மக்கள் எழுப்பி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணக்கூடிய மற்றும் நாட்டிலுள்ள பல்லின மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக அமையும்.

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வார் என்று பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கந்தார் அக்கின் கூறினார்.

மக்களை பிரதமர் அணுகுவதற்கான தளமாக மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் பொறுப்பற்றத் தரப்பினரும் பரப்பி வரும் தவறான தகவல்களால் பொது மக்கள் கவரப்படாமலிருக்க நடப்பு விவகாரங்கள் குறித்து விளக்கங்களை வழங்குவதற்கும் இந்த நிகழ்வு வாய்ப்பாக அமையும் என்று அவர் சொன்னார்.

அய்டில்பித்ரி மடாணி நிகழ்வை ஜோகூர், சபா, மலாக்கா, திரங்கானு, கிளந்தான், கெடா ஆகிய ஆறு மாநிலங்கள் ஏற்பாடு செய்துள்ள வேளையில்  அதன் நிறைவு விழா பினாங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வழக்கமாக, நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு புத்ராஜெயாவில் உள்ள காம்ப்ளெக்ஸ் ஸ்ரீ பெர்டானாவில் நடைபெறும். எனினும், இம்முறை அந்த வழக்கத்தை மாற்றி மாநிலங்களில் பெருநாள் நிகழ்வுகளை நடத்த பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார் என நேற்று இங்கு நடைபெற்ற மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பின் போது அவர் குறிப்பிட்டார்.

மாநிலங்களில் உள்ள துறைத் தலைவர்களைச் சந்தித்து விளக்கங்களைப் பெறுவது மற்றும்  முக்கியமான மற்றும் மத்திய அரசின் உதவி தேவைப்படக்கூடிய திட்டங்கள் குறித்து விவாதிப்பது ஆகியவையும் பிரதமரின் இந்த மாநிலப் பயணத்திற்கான நோக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது என்றார் அவர்.


Pengarang :