ANTARABANGSA

ஈரான்-இஸ்ரேல் மோதல்: பதற்றதைத் தணிக்க உலகளாவிய நிலையில் முயற்சிகள் தேவை- அன்வார்

கோலாலம்பூர், ஏப் 15- மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்பு மேலும் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும்   பகைமைப் போக்கை  நிறுத்துவதற்கும் ஏதுவாக  அனைத்துத் தரப்பினரும் உலக சமூகத்தின் நலனுக்காகச் செயல்படுவது நல்லது என்று மலேசியா உறுதியாக நம்புகிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோதலைத் தொடர்ந்து நிரந்தரத் தீர்வை உறுதி செய்வதற்கு அப்பிராந்தியத்தில் நிகழ்ந்து வரும் வன்செயல்கள் முடிவுக்கு வரப்பட வேண்டும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மோதலை உடனடியாக நிறுத்தாவிட்டால் தீர்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பாதையும் நிலையானதாக இருக்காது.

நிலைமை எதுவாயினும், இந்த பயங்கரமான சூழலில் தொடர்ந்து பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மலேசியா துணை நிற்கும் என்று அவர் சொன்னார்.

அனைத்து தரப்பினரும்  ஒதுங்கியிருக்கும்  போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது. மேலும் முன்னணி உலகளாவிய பங்களிப்பு நாடுகள்  அனைத்து தரப்பினரின் விரோதப் போக்கை நிறுத்தக் கோர வேண்டும் என்று அவர் நேற்று தனது முகநூல்  பதிவில் கூறினார்

முன்னதாக, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு மற்றும் பிற உயர் அதிகாரிகளை  சந்தித்து மத்திய கிழக்கு நிலைமை குறித்து அன்வார் விவாதித்தார்.

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக  ஈரானின் இந்த தாக்குதல்   அமைந்துள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார். இஸ்ரேலின் இத்தகைய  நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகவும் அவர் கூறினார்.

ஈரானிய புரட்சி காவல்படை இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

– பெர்னாமா


Pengarang :