NATIONAL

மத்தியக் கிழக்கு நெருக்கடியை மலேசியா அணுக்கமாகக் கண்காணிக்கிறது-பிரதமர்

கோலாலம்பூர், ஏப் 15 – மத்திய கிழக்கு நெருக்கடியின் சமீபத்திய
மேம்பாடுகளையும் அதனால் நிதிச் சந்தை உள்பட மலேசியாவுக்கு
ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து
வருகிறது.

நாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலையை வலுப்படுத்த அரசாங்கம்
விவேகமான முறையில் செயல்படும். இந்த நெருக்கடியினால்
மலேசியாவுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளையும் அது கவனத்தில் கொள்ளும்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சிரியாவின் டமாஸ்காசில் உள்ள ஈரானிய துணைத் தூதரகம் மீது
இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தமான தாக்குதலுக்குப்
பதிலடியாக ஈரான் அந்த தாக்குதலைத் தொடுத்ததாக அவர் சொன்னார்.

ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் அனைத்துலகச்
சட்டங்களை அப்பட்டமாக மீறியச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் அமைதி மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய கிழக்கில்
அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கு அனைத்துத் தரப்பினரும்
தங்கள் பங்கினை ஆற்ற வேண்டும் என மலேசியா கருதுகிறது என்றும்
அன்வார் தெரிவித்தார்.

அங்கு தற்போது நிகழ்ந்து வரும் வன்செயல்களுக்கு முடிவு
கட்டாவிட்டால் முன்னெடுக்கப்படும் எந்த தீர்வு நீடிக்காது என்றும் அவர்
கூறினார்.

ஆயினும், இந்த நெருக்கடியினால் பெரும் இன்னல்களை அனுபவித்து
வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மலேசியா எப்போதும் துணை
நிற்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

அங்கு நிலவி வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கு அனைத்து தரப்பினரும்
முக்கியப் பங்கினை ஆற்ற வேண்டிய தருணம் இது என்றும் அவர்
வலியுறுத்தினார்.


Pengarang :