NATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல்- அவதூறுகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பீர்- மந்திரி புசார் வலியுறுத்து

உலு சிலாங்கூர், ஏப் 15- இடைத் தேர்தலின் போது எதிர்க்கட்சியினர்
பரப்பும் அவதூறுகளையும் பொய்ப் பிரசாரங்களையும் நம்ப வேண்டாம்
என்று கோல குபு பாரு தொகுதி மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் இடைத் தேர்தலின் போது தங்களின் நோக்கத்தை அடைவதற்காக
எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும்
பரப்பி வருவர் என அவர் சொன்னார்.

நாங்கள் இப்போது தரவுகளையும் எண்களையும் பார்க்கிறோம். மோசமான
பிரசார விளையாட்டிற்கு பலியாகி விட வேண்டாம். நான் தவறு
செய்திருந்தால் மன்னிப்புக் கோரவும் தவற்றை ஒப்புக் கொள்ளவும்
தயாராக இருக்கிறேன். ஆனால், அவதூறு பரப்ப மாட்டேன் என்று அவர்
குறிப்பிட்டார்.

அவதூறுகளாலும் பொய்களாலும் இன விவகாரங்களாலும் நாட்டை
ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்று பத்தாங் காலி பாலாய்
ராயாவில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில்
உரையாற்றிய போது அவர் சொன்னார்.

மக்கள் நியாயமான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டுமே தவிர
படித்ததை, கேட்டதை வைத்து முடிவெடுக்கக் கூடாது என்றும் அவர்
வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மக்கள் மனோ ரீதியாக ஆரோக்கியமானவர்கள் என்பதோடு
அவர்களின் ஆற்றல் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று அமிருடின்
கூறினார்.

கோல குபு பாரு இடைத் தேர்தல் வரும் மே மாதம் 11ஆம் தேதி
நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 27ஆம் தேதியும் முதல் கட்ட வாக்களிப்பு மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹீயோங் புற்று நோய்
காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :