ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதலில கால்பந்து விளையாட்டாளர்களான மூன்று சிறார்கள் பலி

காஸா நகர், ஏப் 15 – காஸாவிலுள்ள அல்-வாஹ்டா கால்பந்து
அகாடமியின் விளையாட்டாளர்களான மூன்று சிறார்கள் இஸ்ரேலிய
இராணுவத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

மத்திய காஸா தீபகற்பத்திலுள்ள டியர் அல்-பாலா நகரின் மீது அந்த
ஜியோனிச படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அம்மூவரும்
கொல்லப்பட்டதாக அந்த விளையாட்டு கிளப்பை மேற்கோள் காட்டி
அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட மற்றொருத் தாக்குதலில்
மேலும் ஒரு விளையாட்டாளரான ஆடாம் ரமேஸ் நாஹ்பான்
உயிரிழந்ததாக அந்த கிளப் அறிக்கை ஒன்றில் கூறியது.

நகரின் மையப் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட
தாக்குதலில் சகோதரர்களான சாமி அபு இஸ்சா (வயது 4) மற்றும் முகமது
அபு இஸ்சா (வயது 6) ஆகிய இரு சிறார்களும் கொல்லப்பட்டனர் என்று
மருத்துவ வட்டாரங்கள் அடனாடோலு செய்தி நிறுவனத்திடம்
தெரிவித்தன.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 33,700 பேர் உயிரிழந்ததோடு மேலும்
78,400 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் காரணமாக
காஸாவில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதோடு கடுமையான உணவுப்
பற்றாக்குறையும் நிலவுகிறது.

இந்த போரின் காரணமாக காஸா மக்களில் சுமார் 85 விழுக்காட்டினர்
தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளதோடு உணவு, சுத்தமான குடிநீர்
மற்றும் மருந்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.

இஸ்ரேல் இனப் படுகொலையை நிகழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டிய
அனைத்துலக நீதிமன்றம், இனப்படுகொலையை நிறுத்துவதற்கும் காஸாவில் உள்ள அப்பாவி பொது மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை டெல் அவிவ் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Pengarang :