NATIONAL

கே.எல்.ஐ.ஏ. துப்பாக்கிச் சூடு: சந்தேக நபருக்கு எதிராக  இன்று தடுப்புக் காவல் அனுமதி பெறப்படும்

கோத்தா பாரு, ஏப் 16 – கோலாலம்பூர் அனைத்துலக  விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) முதலாவது முனையத்தின் வருகைப் பகுதியில்  துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை விசாரணைக்காகத் தடுத்து வைப்பதற்கு அனுமதியைப் போலீசார் இன்று கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெறவுள்ளனர்.

போலீசார் தற்போது அந்த  சந்தேக நபரிடம் விசாரணை நடத்தி தகவல்களைச் சேகரித்து வருகின்றனர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜெய்ன் கூறினார்.

நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாங்கள் முதலில் விசாரணை செய்வோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.

சந்தேக நபர் பற்றிய அனைத்து தகவல்களையும் போலீசார் சேகரித்த பின்னர் இன்று  காலை 9.00 மணிக்கு இங்கு (கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகம்) செய்தியாளர் சந்திப்பை நடத்துவோம் என்று அவர் கூறினார்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் விளக்கத்தைப் பெற்ற பின்னர் கிளந்தான் போலீஸ்  தலைமையக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சுஹைலி இவ்வாறு சொன்னார்.

இதன் தொடர்பில் முன்னதாகத் தேடப்பட்டு வந்த அந்த சந்தேக நபர் குறிப்பிட்ட  ஒரு இடத்தில் நேற்று மாலை 3.00  மணியளவில் கைது செய்யப்பட்டதை டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் நேற்று உறுதிப்படுத்தினார்.

நேற்று முன்தினம் அதிகாலை 1.20 மணி அளவில்  விமான நிலைய நுழைவாயிலில்  ஆடவர் ஒருவர்  தன் மனைவியை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். ஒரு தோட்டா குறி தவறிய வேளையில் மற்றொரு தோட்டா அவரது மெய்க்காப்பாளர் வயிற்றை தாக்கியது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அந்த மெய்ப்பாதுகாவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஹஃபிசுல் ஹராவி (வயது 38) என்ற நபரை தாங்கள் தேடி வருவதாகப் போலீசார் முன்பு கூறியிருந்தனர்.


Pengarang :