NATIONAL

கிணறு வெட்டும் போது நேர்ந்த துயரம்- மண்ணில் புதையுண்டு ஆடவர் மரணம்

கோத்தா பாரு, ஏப் 16- புதிதாகத் தோண்டப்பட்ட கிணற்றில் சிமெண்ட் வளையத்தை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆடவர் ஒருவர் மண்ணில் புதையுண்டு மாண்டார். இத்துயரச் சம்பவம் பாசீர் மாஸ், மஸ்ஜிட் கம்போங் கெலாங் தோக் உபானில் நேற்று நிகழ்ந்தது.

பொது மக்களின் உதவியுடன் நேற்றிரவு 7.15 மணியளவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட முகமது கைருள் ஜெப்ரி மாரோப் (வயது 23) என்ற அவ்வாடவர் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்த மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.54 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பாசீர் மாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து பத்து பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பாசீர் மாஸ் தீயணைப்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி அட்னான் மாட் ஜூரி கூறினார்.

மாலை 6.17 அளவில் சம்பவ இடத்தை அடைந்த அவர்கள், சுமார் ஆறு மீட்டர் ஆழம் கொண்ட கிணற்றில் அவ்வாடவர் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர் என்று அவர் சொன்னார்.

தீயணைப்பு வீரர்கள் அஅந்த ஆடவரின் உடலை மீட்டு மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்று பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :