NATIONAL

கே.எல்.ஐ.ஏ. துப்பாக்கிச் சூடு- சந்தேக நபருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிப்பு

கோத்தா பாரு, ஏப் 22 – இம்மாதம்  14ஆம் தேதி  அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ) முதலாவது முனையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபருக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி ஏ.எஸ்.பி. சித்தி யுஸ்னிதா யாக்கோப் செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் அகமது ஷியாபிக் இஸாட் நஸ்ரியா,  ஹஃபிசுல் ஹவாரி என்ற அந்த சந்தேக நபரின் தடுப்புக் காவலை  நாளை தொடங்கி  ஏப்ரல் 27ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

1971ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் 8வது பிரிவு மற்றும் 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின்  8 (ஏ) பிரிவு  ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காகத் தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

முன்னதாக, ஆரஞ்சு நிற லாக்கப் உடையிலிருந்த ஹஃபிசுல், கிளந்தான் மாநில போலீஸ்  தலைமையக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் (டி9) கடுமையான பாதுகாப்புடன் காலை 8.35 மணிக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரது மனைவியின் மெய்க்காப்பாளர் வயிற்றில் பலத்த காயமடைந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  உண்மையான இலக்காக இருந்த சந்தேகப் பேர்வழியின் மனைவி தெய்வாதீனமாக உயிர்த் தப்பினார்.


Pengarang :