ANTARABANGSA

ராஃபா நகரிலுள்ள இரு வீடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல்- 14 சிறார்கள் பலி

காஸா, ஏப் 22 – நேற்று காலை காஸாவின் தெற்கே உள்ள  ராஃபா நகரில்  பாலஸ்தீனர்கள்  குடியிருக்கும் இரு வீடுகளை குறிவைத்து  போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம்   இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில்  14 சிறார்கள்  உட்பட 19 பேர் பலியாகினர்.

ராஃபாவின் மையத்தில் உள்ள அஷ்டோட் முகாம் பகுதியில் உள்ள  ஜூடே குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலில் கணவர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவர்களது மகள் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.

கொல்லப்பட்ட மனைவிக்கு உடனடியாக சிசேரியன் செய்து குழந்தையின் உயிரை  மருத்துவக் குழுவினர் காப்பாற்றினர்.

ரஃபாவின் கிழக்கே  உள்ள அப்டீல்-அல் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டைக் குறிவைத்து இரண்டாவது தாக்குதல்  நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 13 சிறார்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. மேலும் பலர் காணாமல் போன நிலையில்  இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ராஃபாவின் கிழக்கே கிர்பெட் அல்-அடாஸ் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குறிவைத்து போர் விமானங்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் மூன்று பேர் காயமடைந்தனர்.

ஆக்கிரமிப்பு இராணுவ விமானம் மத்திய காஸா பகுதியில் உள்ள நுசிராட் முகாமுக்கு வடக்கே குடிமக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி  முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 34,097 பேராக உயர்ந்துள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறினர். மேலும் இப்போரில்  76,980 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்கள் ஆவர்.


Pengarang :