NATIONAL

விவசாயம், பண்ணைத் துறைகளில் தென் கொரிய நிறுவனங்கள், கல்விக்கூடங்களுடன் யுனிசெல் ஒத்துழைப்பு

ஷா ஆலம், ஏப் 22 – தென் கொரியாவில் விவசாயம் மற்றும் பண்ணைத்  துறைகளில் கவனம் செலுத்தும் தென் கொரியாவின் பல முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன்  சிலாங்கூர் பல்கலைக்கழகம்  (யுனிசெல்) ஒத்துழைப்பை நல்கவுள்ளது.

யுனிசெல் பல்கலைக்கழக  பொறியியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைக்கும் தென் கொரிய நிறுவனங்களுக்கும் இடையில் சந்திப்பு மற்றும் வெளிப்படுத்தாத ஒப்பந்தம் (என்.டி.ஏ.) கையெழுத்திடும் நிகழ்வு  கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றதாக அதன் நிறுவன தகவல் தொடர்பு இயக்குனர் ஹஸ்ரில் அபு ஹாசன் கூறினார்.

யுனிசெல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விவசாயத் துறையில் நுண்ணுயிர் தொழில்நுட்பம் குறித்த நீண்டகால ஆராய்ச்சியைத் தொடர்வதே சந்திப்பின் நோக்கமாக இருந்தது என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்த என்.டி.ஏ. ஒப்பந்தம் சஃபுவான் கொரியா, கொரியா சூங்சில் சைபர் பல்கலைக்கழகம், கே.டி. கார்ப்பரேஷன் (முன்பு கொரியா டெலிகாம்) மற்றும் நோங்யுப் வங்கி ஆகியவற்றுடன் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்வில் யூனிசெல் நிர்வாகத்தைப் பிரதிநிதித்து அதன் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் டத்தோ முகமட் ரெட்சுவான் ஓத்மான் கலந்து கொண்டார்.

மேலும், தென் கொரியாவில் உள்ள சியோல் பல்கலைக்கழகம் மற்றும் கொரியா மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய இரண்டு கல்வி நிறுவனங்களுடனும் யுனிசெல் விரைவில் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என்று ஹஸ்ரில் கூறினார்.


Pengarang :