NATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெ.1,500 நிதியுதவி- ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் தகவல்

ஷா ஆலம், ஏப் 24- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு
தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த குடும்பங்களுக்குத்
தலா 1,500 வெள்ளி உதவித் தொகை விரைவில் வழங்கப்படும்.

நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் 1,000
வெள்ளியையும் மாநில அரசு 500 வெள்ளியையும் பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு வழங்கும் என்று பேரிடர் மேலாண்மைத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

எங்களுக்கு கிடைத்த தரவுகளின் படி மொத்தம் 178 குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள் மூன்று துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர்.

அவற்றில் 90 குடும்பத்தினர் பெட்டாலிங் மாவட்டத்தையும் 15
குடும்பத்தினர் கோல சிலாங்கூர் மாவட்டத்தையும் 73 குடும்பத்தினர்
கிள்ளான் மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த உதவி நிதி அண்மைய
வெள்ளப் பேரிடரின் போது வெள்ள நிவாரண மையங்களில்
தங்கியிருந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள ராஜா துன் ஊடாலகத்தில் பத்து நிமிட வாசிப்பு இயக்க
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

இந்த வெள்ளப் பேரிடரின் போது தற்காலிக நிவாரண மையங்களில்
தங்கியிராதவர்களும் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என
அவர் மேலும் கூறினார்.

வெள்ளத்தின் போது துயர் துடைப்பு மையங்களில் தங்கியிராதவர்கள்
வெள்ள பாதிப்பு குறித்து காவல் துறையில் புகார் செய்து மாவட்ட
அலுவலகங்களில் உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம். நாங்கள்
அதனை பரிசீலிப்போம் என்றார் அவர்.

கடந்த வாரம் இடைவிடாது பெய்த அடை மழை காரணமாக சுங்கை
பூலோ, சுபாங் மற்றும் மேரு ஆகிய பகுதிகளில் கடுமையான வெள்ளம்
ஏற்பட்டது.


Pengarang :