NATIONAL

ஜெர்மனிக்கான மலேசியத் தூதருடன் மந்திரி புசார் சந்திப்பு- முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பில் பேச்சு

ஷா ஆலம், ஏப் 24 – ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் சிலாங்கூரில்
அதிகளவில் முதலீடுகளைச் செய்வதை ஊக்குவிக்கவும் அந்நாட்டில்
உள்நாட்டு நிறுவனங்களின் ஒருங்கமைப்பை விரிவுபடுத்துவதற்கான
வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சிலாங்கூர் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

ஜெர்மனியில் நேற்று நடைபெற்ற ஹென்னவோர் மெஸ்ஸி மாநாட்டின்
போது அந்நாட்டிற்கான மலேசியத் தூதருடன் நடத்தப்பட்ட சந்திப்பின்
போது இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் உதவி புரிய தாம்
தயாராக உள்ளதாக டத்தின் டாக்டர் அடினா கமாருடின் கூறியதாக
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவை
வலுப்படுத்துவதில் மிடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு
வாரியம், மாட்ரேட் எனப்படும் மலேசிய வெளி வர்த்த்க மேம்பாட்டுக்
கழகம் ஆகியவற்றுடன் தமது குழுவினரும் மத்தியஸ்தர்களாகச்
செயல்படத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் என அமிருடின்
தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

டத்தின் டாக்டர் அடினா கமாருடினுக்கும் ஜெர்மன் நாட்டிலுள்ள மலேசிய
தூதரகத்தின் பணியளார்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும்
தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.

ஜெர்மன் நாட்டில் நடைபெறும் ஹென்னவோர் மெஸ்ஸி எனப்படும்
அனைத்துலக தொழில்நுட்ப, இயந்திரவியல் மற்றும் மின்னியல் மாநாடு
மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற மலேசியாவின் ஒரே மாநிலமாக
சிலாங்கூர் விளங்குகிறது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆய்வரங்கில்
தென்கிழக்காசியாவின் மூன்று பேராளர்களில் ஒருவராக அமிருடின்
கலந்து கொண்டார்.


Pengarang :