NATIONAL

கோல குபு பாரு தொகுதியில் ஒற்றுமை அரசின் வேட்பாளராகப் பாங் சோக் தவோ தேர்வு

உலு சிலாங்கூர், ஏப் 25 – அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு
தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில் வீடமைப்பு மற்றும்
ஊராட்சித் துறை அமைச்சரின் பத்திரிகைச் செயலாளரான பாங் சோக்
தவோ (வயது 31) களமிறங்கவுள்ளார்.

நேற்று இங்குள்ள தாமான் கேமெலானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் இந்த வேட்பாளரின்
பெயரை அறிவித்தார். இந்த நிகழ்வில் மாநில ஹராப்பான் தலைவர்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தெனாகா நேஷனல் பல்கலைக்கழக பட்டதாரியான பாங் எரிசக்தி,
தொழில்நுட்ப மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சரின் சிறப்பு
விவகாரங்களுக்கான அதிகாரியாகவும் உபா டிவியின் தயாரிப்பாளராகவும்
ஏற்கனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரா லீ கீ ஹியோங்கின் மறைவைத்
தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான
லீ புற்றுநோய் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானார்.

இத்தொகுதியில் எதிர்வரும் மே 11ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதற்குத்
தேர்தல் ஆணையம் நாள் குறித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வேட்பு
மனுத்தாக்கல் நிகழ்வும் மே 7ஆம் தேதி தொடக்கக் கட்ட வாக்களிப்பும்
நடைபெறும்.

இந்த தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.
இன விகிதாசரப்படி 46 விழுக்காட்டு மலாய்க்காரர்களும் 31 விழுக்காட்டு
சீனர்களும் 18 விழுக்காட்டு இந்தியர்களும் இரண்டு விழுக்காட்டு இதர
இனத்தினரும் வாக்காளர்களாக உள்ளனர்.


Pengarang :