NATIONAL

ஒற்றுமை கூட்டணி பிரச்சனைகளை உருவாக்கவில்லை, தீர்வுக்கான வழியைக் காட்டுகிறது – மந்திரி புசார்

உலு சிலாங்கூர், ஏப் 25- எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் போல்
சிக்கலானப் பிரச்சனைகளை அரசியலாக்காமல் அவற்றுக்குத் தீர்வு
காண்பதற்கான வழிகளை ஆராய்வதில் ஒற்றுமை அரசாங்கம்
முன்னுரிமை அளிக்கிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

இக்கூட்டணி அனைத்து நிலைகளிலும் கடுமையாக உழைத்ததன்
காரணமாக நாட்டின் பொருளாதாரக் குறியீட்டில் பல நேர்மறையான
விளைவுகளை ஏற்பட்டன. நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை
அதிகரிப்பு அண்மைய சில தினங்களாகப் பங்குச் சந்தை கண்டு வரும்
ஏற்றம் ஆகியவையும் அவற்றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் மட்டுமின்றி தென்கிழக்காசியாவிலே மிகப்பெரிய
ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்பு பூங்கா (ஐ.சி.) சிலாங்கூரில்
அமைக்கப்படும் என்ற மகிழச்சிகரமானத் தகவலை பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் நான் ஜெர்மனியில் இருந்த போது அறிவித்தார்.

அதே சமயத்தில் மலேசிய பங்குச் சந்தையில் பரிவர்த்தனையின் அளவு
ஏற்றத்தை நோக்கிச் செல்வதை காண்கிறேன். நேற்று முன்தினம் 370
கோடி வெள்ளியாக இருந்த பரிவர்த்தனையின் அளவு நேற்று 400 கோடி
வெள்ளியாக உயர்ந்தது என்று அவர் சொன்னார்.

நாடு மீட்சி பெற்று வருவதற்கான அறிகுறியாக இவை விளங்குவதோடு
மக்களின் வாழ்க்கையை சுபிட்சமடையச் செயவதற்கான
நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.

இவைதான் இன்றைய ஒற்றுமை அரசாங்கம் மக்களுக்கு வழங்கும்
அனுகூலங்களாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் ஒன்றிணைந்து
வேலை செய்வதை ஊக்குவிப்பதற்கு பதிலாக அரசாங்கத்தைக்
கவிழ்ப்பதற்கும் மக்களிடையே காணப்படும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் தினமும் முயன்று வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு இங்கு கோல குபு பாரு தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான்
கூட்டணி வேட்பாளரை அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றிய
போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :