NATIONAL

அமைச்சில் கிடைத்த அனுபவத்தை மக்கள் நலன் காக்க பயன்படுத்துவேன்- ஹராப்பான் வேட்பாளர் கூறுகிறார்

உலு சிலாங்கூர், ஏப் 25- கோல குபு பாரு தொகுதியை மேம்படுத்துவதில்
அமைச்சு அதிகாரியாகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவத்தை
பயன்படுத்த கோல குபு பாரு தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர்
உறுதி பூண்டுள்ளார்.

ஜசெகவை பிரதிநிதித்து இடைத் தேர்தலில் போட்டியிடும் பாங் சோக்
தவோ (வயது 31) வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா
கோர் மிங்கின் பத்திரிகைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

நேற்று இங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் சுருக்கமாக
உரையாற்றிய அவர், இரு அமைச்சுகளில் பணியாற்றிய அனுபவத்தை
தொகுதி மேம்படுத்துவதற்கு தாம் பயன்படுத்தவுள்ளதாகக் கூறினார்.

கோல குபு பாரு மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் தொகுதியில்
மேம்பாட்டைக் கொண்டு வருவதற்கும் இரு அமைச்சுகளில் பெற்ற
அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்துவேன் என்றார் அவர்.

நேற்றிரவு கோல குபு பாருவில் உள்ள தொகுதி சேவை மையத்தில்
நடைபெற்ற நிகழ்வில் ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக்
ஹராப்பான் வேட்பாளராகப் பாங்கை அறிமுகம் செய்தார்.

அம்பாங்கில் பிறந்தவரான பாங், கடந்த 2018 முதல் 2020 வரை எரிசக்தி,
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சில் சிறப்பு
அதிகாரியாகவும் பின்னர் அமைச்சர் கோர் மிங்கின் பத்திரிகைச்
செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் (வயது 58) புற்று
நோய் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத்
தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 27ஆம் தேதி
நடைபெறவுள்ள வேளையில் வாக்களிப்பு மே மாதம் 1ஆம் தேதி
நடைபெறும்.


Pengarang :