SELANGOR

உலு சிலாங்கூரிலுள்ள 26 சிறு வணிகர்கள் வெ.133,400 மதிப்புள்ள வர்த்தக உபகரணங்களைப் பெற்றனர்

உலு சிலாங்கூர், ஏப் 26- உலு சிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 சிறு
வணிகர்கள் வறுமை ஒழிப்பு புளுபிரிண்ட் உதவித் திட்டத்தின்
(புளுபிரிண்ட்) வாயிலாக வர்த்தக உபகரணங்களைப் பெற்றனர்.

சிறு வணிகர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்
அவர்களுக்கு வர்த்தக உபகரணங்களை வழங்குவதை நோக்கமாக
கொண்ட இந்த புளுபிரிண்ட் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல்
அமலில் இருந்து வருவதாக வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இந்த திட்டத்தின் வாயிலாக அரைக்கும் இயந்திரம், குளிர் பதனப் பெட்டி,
அடுப்பு உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வணிகர்களுக்கு
வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

சிறு வணிகர்களின் வர்த்தக ஆற்றலைப் பெருக்கி அவர்கள் அதிக
வருமானத்தை ஈட்டுவதற்குரிய வாய்ப்பினை இந்த திட்டம் வழங்குகிறது
என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி பேருந்து கட்டணம் மற்றும்
புளுபிரிண்ட் திட்ட பயனாளிகளுக்கு வர்த்தக உபகரணங்கள் வழங்கும்
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத்
தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
தலைமை தாங்கினார்.

இதனிடையே, இந்த திட்டத்தின் வாயிலாக தாம் 4,300 வெள்ளி மதிப்புள்ள
உணவுப் பொருள்களை வைக்கும் அடுக்கு மற்றும் குளிர் பதனப்
பெட்டியைப் பெற்றதாக வணிகரான ஜமாலியா மாட் ஷாரிப் (வயது 53)
கூறினார்.

நான் பெர்கர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளேன். போதுமான இடம் இல்லாத
காரணத்தால் விற்பனை பொருள்களை அதிகமாக கையிருப்பு வைக்க முடிவதில்லை. இந்த உபகரணங்கள் மூலம் இனி கூடுதலாகப் பொருள்களை சேமித்து வைப்பதற்கு வாய்ப்பு கிட்டும் என்றார்.


Pengarang :