NATIONAL

தனிப்பட்ட தாக்குதல்களால் கலங்கமாட்டேன்- சேவைதான் எனது குறிக்கோள்- ஹராப்பான் வேட்பாளர் கூறுகிறார்

உலு சிலாங்கூர், ஏப் 30- எதிர்க்கட்சிகள் தனக்கு எதிராக நடத்தி வரும்
தனிப்பட்டத் தாக்குதல்களைக் கண்டு தாம் ஒருபோதும் கலங்கப்
போவதில்லை என்று கோல குபு இடைத் தேர்தலில் போட்டியிடும்
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான பாங் சோக் தாவ் உறுதிபடக்
கூறினார்.

மக்களுக்கு ஆற்றக்கூடிய சேவையை இலக்காகக் கொண்டு பிரச்சாரம்
செய்வதில் தாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வரப்போவதாக அவர்
சொன்னார்.

முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி என்ற முறையில் இந்த தேர்தல் பிரச்சார
காலத்தை இந்த தொகுதியில் தனது எதிர்காலத் திட்டங்கள் யாவை
என்று வாக்காளர்களுக்கு விளக்கமளிப்பதில் செலவிடவுள்ளதாக அவர்
சொன்னார்.

என்னைப் பொறுத்த வரை தொகுதி மீதான கவனம்தான் முக்கியம்.
அதிலிருந்து விலக முடியாது. தனிப்பட்ட தாக்குதல்கள் கோல குபு பாரு
மக்களுக்கு அவசியமற்றவை. தங்களுக்குச் சேவையாற்றக் கூடியவர்கள்
அவர்களுக்குத் தேவை என்று அவர் சொன்னார்.

அவ்வாறு செய்ய முடியும் என நான் உளமாற நம்புகிறேன். நாம்
முதிர்ச்சியான அரசியலை நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.
நான் மற்றவர்களின் தனிப்பட்ட விவகாரங்களை விமர்ச்சிக்க மாட்டேன்.
எனது எதிராளிகளும் விவேகமான முறையில் பிரச்சாரம் செய்வார்கள் என
நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

தனக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும்
பிரசாரங்களின் போது மக்கள் அளித்து வரும் ஆதரவு நேர்மறையானதாக
உள்ளதாக அவர் சொன்னார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு.
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின், சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு மே மாதம் 11ஆம் தேதி
நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரச்சாரம்
செய்வதற்கு 14 நாட்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :