MEDIA STATEMENTNATIONAL

அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை காக்க  PH வேட்பாளருக்கு எங்கள் ஓட்டு

செய்தி ; சு.சுப்பையா

கோல குபு பாரு.ஏப்.29- நாட்டில் இனவாதம் மதவாதம் தலை தூக்காமல் இருக்க வேண்டும். அடுத்த தலைமுறையின் நலன் காக்க எனது குடும்பத்தில் உள்ள 15 ஓட்டுகளும் PH வேட்பாளருக்கு அளிப்போம் என்று நடேசன் ( வயது 65) தெரிவித்தார்.

நான் உலு சிலாங்கூரில் பிறந்து வளர்ந்தவன். இத்தொகுதியில் உள்ள எங்களது பிரச்னைக்கு தீர்வு காண ஆளுங்கட்சியால் மட்டுமே முடியும் என்பதை திடமாக நம்புகிறோம். ஆகவே எனது குடும்பத்தார் அனைவரும் PH வேட்பாளருக்கே வாக்களிப்போம் என்று திட்டவட்டமாக கூறினார்.

வெளியில் உள்ளவர்கள் வாக்களிக்க வேண்டாம், புறக்கணிப்போம் என்று புலனத்தில் பிரச்சாரம் செய்கின்றனர்.  இதைத் தவிர எதிர்க் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி இந்திய தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு  இத்தொகுதி மக்களின் தேவைகளை பற்றி அக்கறையில்லை.

அவர்களின் அறை கூவலை கோல குபு பாரு மக்கள் கண்டிப்பாக புறக்கணிப்பார்கள். எங்களது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளின் எதிர்கால நலனை முன்வைத்து ஜ.செ.க.வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்று பிரபாகரன் ( வயது 75 ) கூறினார்.

இதே போல் எங்களது முழு ஆதரவு பக்காத்தான் ஹரப்பான்  வேட்பாளர்  பாங்கிற்கே என்று மேகா தனது நண்பர்களுடன் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றம் பெரிக்காத்தானிடம் இருக்கிறது. வெற்றி பெற்ற பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இது வரையில் இந்தியர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் குரல் எழுப்பியது கிடையாது.   அப்படியிருக்கையில் ஏன் பெரிக்காத்தான் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மேகா கேள்வி எழுப்பினார்.

மக்கள்  அபிப்பிராயப்படி,  ஒட்டு மொத்தத்தில் இந்தியர்களின் வாக்குகள் கணிசமான அளவில் பி.எச். வேட்பாளருக்கும் கிடைக்கும் என்று அறிய முடிகிறது. ஜ.செ.க.வின் இந்திய தலைவர்கள் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு தலைமையில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதே போல் பி.கே.ஆர் கட்சியின் சார்பில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியா தலைமையில் ஒரு குழு இந்திய வாக்குகளை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சின் துணையமைச்சர் டத்தோ ரமணன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரும் கூட  இந்திய வாக்குகளை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்காளர்களை சந்திக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று கோல குபு பாருவில் 500 க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்களை இங்குள்ள அரங்கத்தில் டத்தோ ரமணன் சந்தித்தார். அவர்களது பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டார். இப் பிரச்னைகளில் சில தெக்கூன் வழி தீர்வு காண ஏற்பாடு செய்வதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இச்சந்திப்பு கூட்டத்தை உலு சிலாங்கூர் பி.கே.ஆர் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான கலைச்செல்வன் ஏற்பாடு செய்தார்.


Pengarang :