NATIONAL

நிறைமாதக் கர்ப்பிணியின் துணிகரம்-கொள்ளையனை 50 மீட்டர் துரத்திச் சென்று பிடித்தார்

ஷா ஆலம், ஏப் 30- இங்கு செக்சன் 23இல் உள்ள பேரங்காடி ஒன்றின்
பொதுக் கழிப்பறையில் இருந்த போது தனது கைப்பையை பறித்துக்
கொண்டு தப்பியோடிய கொள்ளையனை நிறைமாதக் கர்ப்பிணி ஒருவர்
சுமார் 50 மீட்டர் துரத்திச் சென்று பொது மக்களின் உதவியுடன் பிடித்தார்.

முப்பத்தேழு வயதுடைய ஒன்பது மாதக் கர்ப்பிணி உதவி கோரி
கூச்சலிட்டவாறு அக்கொள்ளையனை நோக்கி ஓடிய போது துணைக்கு
வந்த பொது மக்கள் 22 வயதுடைய அவ்வாடவனை மடக்கிப் பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான அந்த
மாதுவிடமிருந்து நேற்றிரவு 20.37 மணியளவில் தாங்கள் புகாரைப்
பெற்றதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
இக்பால் இப்ராஹிம் கூறினார்.

தனது மூன்றாவது குழந்தையின் பிரசவத்திற்கு தேவைப்படும்
பொருள்களை வாங்குவதற்காக அம்மாது அந்த பேரங்காடிக்கு தனியாகச்
சென்றதாக அவர் சொன்னார்.

அந்த பேரங்காடியின் கழிப்பறையில் இருந்த போது கழிப்பறை கதவில்
மாட்டி வைக்கப்ட்டிருந்த தனது கைப்பையை ஆடவன் ஒருவன் எடுத்துக்
கொண்டு ஓடுவதை அவர் கண்டுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் அம்மாது உதவி கோரி
கூச்சலிட்டவாறு அவ்வாடவனை விடாது துரத்தியுள்ளார். துணைக்கு வந்த
பொது மக்கள் அவனை கைப்பையுடன் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்
என்று அர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இச்சம்பவத்தில் அம்மாதுவுக்குக் காயம் ஏதும் ஏற்படாத போதிலும்
பிரசவத்திற்காக அவர் ஷா ஆலம் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட அந்த கொள்ளையனுக்குத் திருட்டு
மற்றும் போதைப் பொருள் தொடர்பில் நான்கு முந்தைய குற்றப்பதிவுகள்
உள்ளதோடு நீர் சுத்திகரிப்பு சாதனத் தயாரிப்பு தொழிற்சாலையில் அவன்
வேலை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக இக்பால்
மேலும் சொன்னார்.


Pengarang :