NATIONAL

கோலா குபு பாரு மக்கள் மாநில அரசின் நலத் திட்டங்கள் மூலம் பயனடைந்தனர்

ஷா ஆலம், ஏப் 30: கோலா குபு பாரு மக்கள் மீது மறைந்த லீ கீ ஹியோங் கொண்ட அக்கறையால் ,மாநில அரசின்  மக்கள்  நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில்  தொகுதிக்கு  முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அத்தொகுதியில் வசிப்பவர்கள் பிங்காஸ் திட்டம் உட்பட எந்த ஊக்கத் தொகையையும் பெறத் தவறியதில்லை. மூன்று குழந்தைகளை கொண்ட ஒற்றைத் தாயான கே சரோஜனி (46), பிங்காஸ் திட்டத்தின் பலன்களை ஐந்து ஆண்டுகளாகப் பெற்று வருவதாகக் கூறினார்.

“நான் ஐந்து வருடங்களாகப் பிங்காஸ் பெற்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாதம் 200 ரிங்கிட்டிலிருந்து, தற்போது மாநில அரசு அதை ரிம300 ஆக உயர்த்தியுள்ளது.

“இந்த திட்டம் எனது குடும்பம் உணவு வாங்க உதவுகிறது. ஒரு தொழிலாளியான என் சம்பளம் போதாது, ஏனெனில் பல விஷயங்கள் விலை உயர்ந்துள்ளன,” என்று அவர் சிலாங்கூர்கினியைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலும், பிங்காஸ் உதவியைப் பெற்ற சவந்தலா (42), சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கிய அவரின் கணவருக்கு அன்றாட தேவைகளை வாங்க இந்த உதவி பயன்படுத்தப்படுகிறது என்றார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பிங்காஸைப் பெற்றேன். நான் சமையலறை பொருட்களை வாங்கவும், சில சமயங்களில் என் கணவருக்குப் பால் மற்றும் உணவு வாங்கவும் இதைப் பயன்படுத்துகிறேன்,” என்று தொழில்சாலையில் பணிபுரியும் அவர் தெரிவித்தார்.

இந்த உதவியின் மூலம் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் உட்பட அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்கு 30,000 குடும்பங்களுக்கு இ-வாலட் மூலம் மாதத்திற்கு RM300 வழங்கப்படும்.

பிங்காஸைத் தவிர, கோலா குபு பாருவில் வசிப்பவர்கள் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் மூலம் நன்மைகளைப் பெறுகின்றனர்.

இந்த ஆண்டு தாம் ஜோம் ஷோப்பிங் பெறுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஆண்டாகும் என டாக்சி ஓட்டுநர் ஏ மாலெக் நோர் (54) தெரிவித்தார். இதன் மூலம் ஐடில்பித்ரி தேவைகளை வாங்க முடிகிறது.

“இரண்டாவது முறையாக நான் ஜோம் ஷாப்பிங் வவுச்சரைப் பெறுகிறேன். இதன் மூலம், கொஞ்சம் சேமிக்கலாம். பொதுவாக விடுமுறை காலங்களில் நாங்கள் அதிகமாகச் செலவிடுவோம்.

“டாக்சி ஓட்டுனரான எனது வருமானமும் நிச்சயமற்றது, என் மனைவியும் வேலை செய்யவில்லை. எனவே இந்த உதவி எங்கள் குடும்பத்தின் சுமையை ஓரளவு குறைக்கும்,” என்று அவர் கூறினார்.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைக் காக்கும் நீண்ட கால திட்டமாகக் குறைந்த வருமானம் பெறும் குழுக்களை இலக்காகக் கொண்டு RM150 மதிப்பிலான ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :