NATIONAL

சவூதி அரேபியாவுடன் புதிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா தயார்

கோலாலம்பூர், ஏப் 30- சவூதி அரேபியாவின் 2030 தொலைநோக்குத்
திட்டத்தில் இணைய மலேசியா தயாராக உள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார். இதன் அடிப்படையில் அந்நாட்டுடன் புதிய
துறைகளில் குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரோஜன்
துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய தாங்கள்
விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, மலேசியாவில் உயர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களில
முதலீடு செய்ய சவூதி அரேபிய முதலீட்டாளர்களை தாங்கள் பெரிதும்
வரவேற்பதாக நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.

நாடு திரும்புவதற்கு முன்னர் ரியாத்திலுள்ள யமாமா அரண்மனையில்
சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானை
சந்தித்த போது பிரதமர் அன்வார் மலேசியாவின் இந்த எதிர்பார்ப்பை
வெளியிட்டார்.

கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்ற அனைத்துலக பொருளாதார
ஆய்வரங்கின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவூதி
அரேபியா சென்றிருந்த அவர் இன்று தாயகம் திரும்புகிறார்.
தங்களின் இந்த சந்திப்பு இரு வழி வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பான
அம்சங்களையும் உள்ளடக்கியிருந்ததாக அன்வார் தனது எக்ஸ் பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.

இலக்கவியல் மற்றும் பசுமைப் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு,
சுத்தமான எரிசக்தி, தற்காப்பு, மின்சாரம் மற்றும் மின்னியல் , வான்
போக்குவரத்து உள்ளிட்ட உயர் மதிப்பு கொண்ட துறைகளில்
மலேசியாவில் முதலீடு செய்ய சவூதி முதலீட்டாளர்களை நாங்கள்
வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.

அடுத்தாண்டில் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்க மலேசியா
தயாராகி வருவதாகவும் ஆசியான்-வளைகுடா-சீனா மாநாட்டையும் அது
நடத்தவிருப்பதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :