NATIONAL

நிந்தனைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகச் செகுபார்ட் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஏப் 30 –  இங்குள்ள ஃபாரஸ்ட் சிட்டி  சூதாட்ட மையத் திட்டம் தொடர்பில்  கடந்த  ஏப்ரல் 22ஆம் தேதி நிந்தனைக்குரிய கருத்துகளை   வெளியிட்டதாக  பெர்சத்து  கட்சியின் தகவல் குழு உறுப்பினரான செகுபார்ட் என அழைக்கப்படும் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ் சாட்டப்பட்டது.

நீதிபதி ரசிடா ரோஸ்லி முன்னிலையில்  தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை  45 வயதான பட்ருள் ஹிஷாம் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கோலாலம்பூர், முத்தியாரா வில்லா புக்கிட் பிந்தாங்கில் ‘செகு பார்ட்’ என்ற பெயரிலான தனது முகநூல் கணக்கில் நிந்தனைக்  கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை  அல்லது  இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் (சட்டம் 15) பிரிவு 4(1)(c) இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்களான டத்தோ மஸ்ரி முகமட் டாவுத், அப்துல் கபார் அப்துல் லத்தீப், அப்துல் மாலிக் அயோப் மற்றும் நதியா முகமட் இசார் ஆகியோர் வழக்கை நடத்துகின்றனர்.

செகுபார்ட் சார்பில் வழக்கறிஞர் முகமது ரஃபிக் ரஷிட் அலி ஆஜராகிறார். பாசிர் கூடாங் நாடாளுமன்ற  உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம்  இந்த வழக்கில் கண்காணிப்பு வழக்கறிஞராக ஆஜராகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட செகுபார்ட்டை  ஒரு நபர் உத்தரவாதத்துடன்  10,000 வெள்ளி  ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


Pengarang :